Last Updated : 05 May, 2018 01:03 PM

 

Published : 05 May 2018 01:03 PM
Last Updated : 05 May 2018 01:03 PM

‘இவர்கள் மதம் பார்க்கவில்லை’: இந்துக்களுக்காக தனி திருமண அழைப்பிதழ் அச்சடித்த முஸ்லிம் குடும்பம்

தேர்தல் வாக்குகளுக்காக அரசியல் கட்சிகள்தான் மதப்பிரிவினையை தூண்டி விடுகின்றன, மத மோதல்களின் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கிறது.

ஆனால், அதையெல்லாம் மீறி, மதங்களுக்கு அப்பால் இந்துக்களும்,முஸ்லிம்களும் இன்னும் சகோதரர்களாகவே இருந்து வருகிறார்கள், விட்டுக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உறவை வளர்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

பாஜக தலைவர்களில் ஒரு சிலரும், இந்துத்துவா அமைப்புகள் சிலவும் இந்தியா இந்து நாடு, ராமர் கோயிலுக்கு எதிராகப் பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.இந்நிலையில் அவர்களுக்கு இந்தச் சம்பவம் மிகச்சிறந்த உதாரணமாக அமையும்.

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூர் மாவட்டம், பாஹசாரி கிராமத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம், தங்களின் மகள் திருமணத்துக்கு இந்துக்களும் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிடித்தமான ராமர், சீதை படம் பொறித்த பத்திரிகைகளை அச்சடித்து வழங்கி அழைத்து இருக்கிறார்கள். தங்களின் உறவினர்களுக்குத் தனியாக ஒருவிதமான பத்திரிகையும் அளித்து திருமணத்துக்கு அழைத்து இருக்கிறார்கள்.

முகமது சலீம் என்பவரின் மகள் ஜஹானா பானுவுக்கும், யூசுப் முகம்மது ஆகியோருக்கும் கடந்த மாதம் 29-ம் தேதி திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்காகவே இரு விதமான பத்திரிக்கைகளை அச்சடித்து இரு தரப்பினரையும் அழைத்து இருக்கிறார்கள்.

இது குறித்து மணப்பெண்ணின் சகோதரரும், முகம்மது சலீமின் மகனுமான ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:

பாரம்பரிய இஸ்லாமிய வழக்கப்படி எங்கள் உறவினர்களைத் திருமணத்துக்கு அழைக்க 300 பத்திரிக்கைகளை அச்சடித்தோம். அதேபோல எங்களுக்குப் பழக்கமான, நட்புவட்டாரத்தில் இருக்கும் இந்துக்களையும், இந்து நண்பர்களையும் அழைக்க அவர்களுக்குத் தனியாக ராமர், சீதா படம் பொறித்து தனியாக அழைப்பிதழ் அச்சடித்தோம்.

இந்துக்கள் வீடுகளில் நடக்கும் திருமணத்துக்கு அச்சடிக்கும் அழைப்பிதழ் போன்று அந்த அழைப்பிதழ் இருந்தது. ராமர் சீதை படம், தேங்காய், பழம்,பூ குங்குமம், ஹோமம் எரிதல் போன்ற படங்களுடன் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு இருந்தது.

எங்கள் அனைவருக்கும் இந்து நண்பர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு ஏற்றார்போல் பத்திரிக்கை இருக்க வேண்டும் என்பதால், ஒட்டுமொத்த குடும்பமும் அமர்ந்து பேசி இந்த முடிவை எடுத்தோம். சிறப்பு அழைப்பிதழ்களை அடிப்பதில் மணமகன் வீட்டாரும், உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இந்துக்கள் எப்போதும் எங்களுக்கு நண்பர்கள், சகோதரர்கள் என்பதால் எதிர்காலத்தில் இதுபோன்ற நட்பு செயல்கள் தொடரும். அதில் சந்தேகம் இல்லை. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், இடைவெளி குறைந்து ஒற்றுமை வளர வேண்டும் என்பதே எங்களது ஆசையாகும்.

மற்ற மதத்தினர் வணங்கும் கடவுள்களுக்கு நாங்கள் மதிப்பு கொடுத்தால், நிச்சயம் முஸ்லிம் சமூகத்தினரை அனைவரும் மதிப்பார்கள். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x