Published : 23 May 2018 08:52 AM
Last Updated : 23 May 2018 08:52 AM

நிபா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வேண்டுகோள்

‘‘நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயப்பட வேண்டாம். வதந்திகளை நம்பாதீர்கள்’’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்புக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறுவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் நட்டா நேற்று கூறியதாவது:

கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இது உள்ளூரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று தெரிய வந்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் வரும் செய்திகள், வதந்திகளைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு நட்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கேரளாவின் கோழிக்கோடில் பெரம்புரா பகுதியில் நிபா வைரஸால் முதன்முதலில் இறந்தவர்களின் வீட்டுக்கு தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர்கள் குழுவினர் சென்று நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் வீட்டில் இருந்த கிணற்றில் இருந்த சில வவ்வால்களைப் பிடித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மத்திய சுகாதாரத் துறையினர் உயர்மட்டக் குழுவினரும் கேரளாவில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிபா வைரஸ் பாதிப்பை கண்டறியவும், தேவையான உபகரணங்களும் போதிய அளவுக்கு உள்ளதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எண்ணிக்கை 11 ஆனது

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா நேற்று கூறியதாவது: நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தில் 18 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 12 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது’’ என்றார்.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (நேற்று) மேலும் 2 பேர் நிபா வைரஸ் தாக்குதலில் இறந்துள்ளனர். கூரசந்து பகுதியைச் சேர்ந்த ராஜன், செக்கியாட் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்று அவர்கள் பெயர் கொடுத்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து கேரளாவில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் சைலஜா கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x