Last Updated : 31 May, 2018 09:15 PM

 

Published : 31 May 2018 09:15 PM
Last Updated : 31 May 2018 09:15 PM

விமான உதிரிப்பாக ஊழல்?- நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எழுப்பிய 5 கேள்விகள்

இந்திய விமானப்படையில் உள்ள ஏஎன்-32 ரக விமானத்துக்கு உதிரிப்பாகங்கள் வாங்கியதில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.17.55 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிவலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய விமானப்படையில் உள்ள ஏஎன்-32 ரக விமானத்துக்கு உதிரிப்பாகங்களை உக்ரைன் நாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றதில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.17.55 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உதவ வேண்டும் என்று உக்ரைன் ஊழல்தடுப்பு அமைப்பு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் அளிக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்திலும் விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், நிர்மலா சீதாராமனும் 5 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

1. உக்ரைன் நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி, விமான உதிரிப்பாக ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உதவும்படி கேட்டுக்கொண்டது உண்மையா?

2. உக்ரைன் நிறுவனத்துடன் ஒப்பந்த நிபந்தனைகள் நிறைவடையாத நிலையில், பாதுகாப்புத் துறை நிறைவடைந்ததாகக் கையொப்பம் இட்டுள்ளது. இதுதான் ஊழல் நடைபெறக் காரணமாக இருந்தது என்பது உண்மையா?

3. உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுதற்கு இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் என்னவிதமான பதில் அனுப்பியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உள்வட்டார அளவில் ஏதேனும் விசாரணை நடந்ததா?

4. இந்த அரசுக்கு வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் நம்புகிறதா? உண்மையென்றால், மக்களிடம் இருந்து ஏன் உண்மைகளை மறைக்கிறீர்கள்?

5. ரபேல் போர்விமானங்கள் கொள்முதல் போன்று, இந்த விமான உதரிபாகங்கள் வாங்கியதிலும், ரகசியான பிரிவுகள் ஏதேனும் இருக்கிறதா?

இவ்வாறு மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x