Published : 01 May 2018 09:14 AM
Last Updated : 01 May 2018 09:14 AM

மோடி அலையால் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்: முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நரேந்திர மோடி அலை காரணமாக, பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் குறித்து பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா (75) பிடிஐ செய்தியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கர்நாடக தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் ஒருங்கிணைந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். லிங்காயத்து பிரிவினரின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் அரசு தனி மதமாக அங்கீகரித்திருக்கிறது. இதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸ் கட்சிக்கே அது பாதகமாக அமையும்.

ஷிகாரிபுரா தொகுதியில் நான் தொடர்ந்து போட்டியிட்டு (7 முறை) வெற்றி பெற்றுள்ளேன். லிங்காயத்து பிரிவினர் என்னை கைவிடமாட்டார்கள். இந்த முறையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தேர்தலில் வெற்றி பெற கடலோர கர்நாடகாவில் சாதி, மத மோதலை பாஜக ஊக்குவிப்பதாக காங்கிரஸ் பொய் சொல்கிறது. இங்கு மோடி அலை வீசுகிறது. இதன்மூலம் இங்கு மட்டுமல்ல மாநிலம் முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மஜதவுடன் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடம் இருக்காது.

முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி ஏற்படும் என அச்சப்படுகிறார். அதனால்தான் தனது சாதியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கும் பாதாமி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இப்படி இருக்கும்போது காங்கிரஸ் மட்டும் எப்படி மதச்சார்பற்ற கட்சியாக இருக்க முடியும்? பாதாமி தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்ரீராமுலு வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் வெளியில் உள்ளார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பற்றி காங்கிரஸ் பிரச்சினை எழுப்பி உள்ளது.

இதுகுறித்து எடியூரப்பா கூறும்போது, “பாஜகவின் தேர்தல் பிரச்சாரகர்கள் பட்டியலில் ஜனார்த்தன ரெட்டியை சேர்க்கவில்லை. எனவே அவர் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. பாதாமி தொகுதியில் போட்டியிடும் தனது நண்பர் ஸ்ரீராமுலுவுக்காக பிரச்சாரம் செய்கிறார்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x