Published : 05 May 2018 07:27 AM
Last Updated : 05 May 2018 07:27 AM

டெல்லி இளம்பெண் ‘நிர்பயா’ பலாத்கார வழக்கில் மறு ஆய்வு மனு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லியில் இளம்பெண் நிர்பயா கூட்டு பலாத்கார வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, இரண்டு குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டெல்லியில் 2012 டிசம்பர் 16-ம் தேதி இரவு, இளம்பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.பேருந்தில் இருந்த சில இளைஞர்கள், அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனை தடுக்க முற்பட்ட அப்பெண்ணின் நண்பரை கடுமையாக தாக்கி பேருந்தில் இருந்து கிழே தள்ளினர். பின்னர், இளம்பெண்ணை பேருந்தில் இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

பின்னர், பெண்ணை கொடூரமாக தாக்கிய கும்பல், அவரையும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், முதலில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சில நாட்களிலேயே உயிரிழந்தார். அதன்பின் பெண்ணின் பெயரை வெளியிடாமல் ‘நிர்பயா’ என்றே குறிப்பிடப்பட்டது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வினய் சர்மா (23), முகேஷ் (29), பவன் குப்தா (22), அக்ஷய் குமார் சிங் (31), ராம் சிங் (28), 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் என 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி குற்றவியல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனைத் தவிர மற்ற 4 பேருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, குற்றவாளிகள் வினய் சர்மா, பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பானுமதி மற்றும் அசோக் பூஷன் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு டெல்லி காவல் துறைக்கும், குற்றவாளிகளின் வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான முகேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x