Published : 03 Apr 2018 11:28 AM
Last Updated : 03 Apr 2018 11:28 AM

மன்னிப்பு கேட்ட கேஜ்ரிவால்: ஆம் ஆத்மி நிர்வாகிகள் எதிர்ப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அவதூறு வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக எதிர்க்கட்சி தலைவர்களிடம் மன்னிப்பு கேட்ட இந்த செயலை கட்சியின் ஒரு பிரிவு எம்எல்ஏக்களும் கட்சியின் தலைவர்களும் வலுவாக ஏற்க மறுத்துள்ளனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு:

நேற்று காலை, கேஜ்ரிவால் தன்னுடன் நான்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சஞ்சய் சிங், அஷுதோஷ், ராகவ் சதா மற்றும் தீபக் பாஜ்பாய் ஆகியோரருடன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் மன்னிப்பு கோரினார்.

இதை சிலர் ஏற்றுக்கொண்டார்களே தவிர அனைவரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்பது இது முதல் தடவை இல்லை.

ஏற்கெனவே, முன்னாள் பஞ்சாப் மந்திரி மற்றும் ஷிரோமணி அகாலி தல் தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா, மத்திய அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான நிதின் கட்காரி ஆகியோர் மீது அவதூறு கருத்துக்களை வழங்கியதற்காக கேஜ்ரிவால் மன்னிப்பு கோரினார். புதுடெல்லி மாவட்ட கிரிக்கெட் நிர்வாகத்தில் ஜேட்லி அதன் தலைவராக இருந்தபோது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து கேஜ்ரிவால் குற்றஞ்சாட்டியிருந்தார்.

சிதையும் கவனம்

கேஜ்ரிவால் இத்தகைய நீதிமன்ற வழக்குகளை சந்திப்பதால் அவரது நேரத்தையும் ஆற்றலையும் அதுவே சாப்பிட்டுவிடுகிறது. அதுமட்டுமின்றி, புதுடெல்லி யூனியன் ஆட்சியில் முழுக்கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை, நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 30 அவதூறு வழக்குகள் கேஜ்ரிவால் மீது தொடுக்கப்பட்டுள்ளன.

பிரிய முயன்ற எம்எல்ஏக்கள்

இதுமட்டுமின்றி ஏற்கெனவே மஜிதியாவிடம் கேஜ்ரிவால் மன்னிப்புக் கேட்ட போதே நிலைமை எக்கச்சக்கமாக ஆகியிருந்தது.

போதை மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி பின்னர் மன்னிப்பு கேட்டது பஞ்சாப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. துணிச்சலாக பேசிவிட்டு பின்னர் தடுமாறுவது கட்சித் தலைவருக்கு அழகல்ல என்று அவர்கள் கூறினர். மேலும், வேறுவழியின்றி கட்சியை உடைக்கப்போவதாக அச்சுறுத்தினர்.

கட்சியில் பிளவுகளைத் தவிர்ப்பதற்காக, 20 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேரை கெஜ்ரிவால் சந்தித்தார், அவர் மன்னிப்புக்கேற்ற காரணத்தையும் அவர்களிடம் விளக்கினார். அவர் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அனைவருக்கும் நம்பிக்கை இல்லை. பஞ்சாப் எம்எல்ஏக்கள் இந்தப் பிரச்சனை நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியிடம் மன்னிப்பு கேட்டதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் இப்படி செய்துவருகிறாரே என்று பலரும் புலம்பிவருகின்றனர்.

தெற்கு டெல்லி எம்எல்ஏ

இதுகுறித்து ஆம்ஆத்மி எல்எல்ஏ ஒருவர் கூறுகையில், ''கேஜ்ரிவால் எங்கள் தலைவர். அவர்தான் எங்களை வழிநடத்துபவர். இதில் எந்த மாற்றமும் இல்லை.

அதேநேரம் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதற்குப் பின்னால் ஒரு தர்க்கம், நியாயம் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது தவறா? நான் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பது, அவரது இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான்'' என்றார் அந்த பெயர் குறிப்பிட வேண்டாமென கேட்டுக்கொண்ட தெற்கு டெல்லியின் ஒரு எம்எல்ஏ.

மும்பையில் ஆம் ஆத்மி கட்சி நிதிக்காக புரவலர்களை ஒருங்கிணைத்துவரும் ஒரு தொண்டர், கூறுகையில், ''அவர் இப்படி மன்னிப்பு கேட்டிருப்பதால் கட்சிக்கு பண உதவி செய்ய முன்வந்த நிறுவனங்கள் பலவும் இந்த மன்னிப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளன. நாங்கள் கட்சித் தொண்டர்களையும் நன்கொடையாளர்களையும் இந்த நிகழ்வு குறித்து சமாதானப்படுத்த முடியாது.''

உண்மையில், அவதூறு வழக்கை ஒருவழியாக முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நிலையில்தான் கேஜ்ரிவால் நேற்று ஜேட்லியிடம் மன்னிப்பு கேட்டார். துரதிஷ்டவசமாக பலரும் இதை எதிர்த்து வருகின்றனர்.

அவரது கட்சியின் சக நிர்வாகி, குமார் விஷ்வாஸ் மீதும் அவதூறு வழக்கு உள்ளது. அவதூறு வழக்கில் சிக்கியுள்ள அவர் கட்சியில் யாருடனும் தற்போது நல்ல உறவில் இல்லை, அதேவேளை ஜேட்லியிடம் நேற்று அவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை. இந்த அவதூறு வழக்கை எதிர்கொள்ளவும் தயாராகத்தான் இருக்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x