Last Updated : 22 Apr, 2018 03:11 PM

 

Published : 22 Apr 2018 03:11 PM
Last Updated : 22 Apr 2018 03:11 PM

‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகளில் டெபாசிட் ரூ.80 ஆயிரம் கோடியைக் கடந்தது

‘ஜன் தன்’ வங்கிக்கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.80 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது, இன்னும் அதிகமான மக்கள் இந்த வங்கிக்கணக்குகளில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைமக்களுக்கும் அரசின் சமூக நலத்திட்டங்கள் மூலம் மானியத்தொகையை பரிமாற்றம் செய்வதற்காக பிரதமர் மோடியால் ஜன்தன் வங்கிக்கணக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இந்த சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் குறைந்த பட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை.

இதன்படி, கடந்த 2017ம் ஆண்டு தொடங்கும்போது, 26.05 கோடி மக்கள் ஜன் தன் வங்கிக்கணக்கில் இணைந்த நிலையில், 2018, ஏப்ரல் 11-ம்தேதி நிலவரப்படி 31.45 கோடி மக்கள் ஜன்தன் வங்கிக்கணக்கில் இணைந்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்படும் முன் அதாவது 2016, நவம்பர் 9-ம்தேதி 25.51 கோடி பேர் இந்த வங்கிக்கணக்கு தொடங்கி இருந்தனர்.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செயல்படுத்தும் முன் ஜன்தன் வங்கிக்கணக்குகளில் ரூ.45,300 கோடி டெபாசிட் இருந்த நிலையில், கடந்த 2016 நவம்பர் 9-ம் தேதிக்கு பின், ரூ.74 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மக்கள் அதிகமாக டெபாசிட் செய்ததால், ஜன் தன் வங்கிக்கணக்குகளில் டெபாசிட் திடீரென உயர்ந்தது.

அதன்பின் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜன் தன் வங்கிக்கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.73 ஆயிரத்து 878 கோடியாக உயர்ந்தது. 2018, பிப்ரவரி மாதம் இது ரூ.75ஆயிரத்து 572 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ரூ.78 ஆயிரத்து 494 கோடியாக உயர்ந்தது.

இறுதியாக இம்மாதம் 11-ம் தேதி நிலவரப்படி ஜன்தன் வங்கிக்கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.80 ஆயிரம் கோடியைக் கடந்து, ரூ.80 ஆயிரத்து 545 கோடியாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x