Published : 16 May 2024 12:29 PM
Last Updated : 16 May 2024 12:29 PM

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் காலமானார்

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் இன்று(மே 16) அதிகாலை 3 மணியளவில் காலமானார்.

அனிதா கோயல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், மும்பையில் உள்ள சர் ஹெச்என் ரிலையன்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் அபாத் போன்டா தெரிவித்தார். இதையடுத்து, அவரது உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அனிதா கோயலின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிதா கோயலுக்கு கணவர் நரேஷ் கோயல் மற்றும் நம்ரதா கோயல் மற்றும் நிவான் கோயல் எனும் இரு குழந்தைகள் உள்ளனர்.

கனரா வங்கி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ₹538.62 கோடி பணமோசடி வழக்கில் நரேஷ் கோயல் செப்டம்பர் 1, 2023 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 10, 2024 அன்று PMLA சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, அவர் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்ய பம்பாய் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

நரேஷ் கோயல் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஹரிஷ் சால்வே மற்றும் அபாத் போண்டா ஆகியோர், அவரது மனைவி புற்றுநோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே நரேஷ் கோயல் தனது மனைவியுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தங்கள் மனுவில் வாதிட்டனர். அவர் தனது மனைவியுடன் இருப்பது, இது போன்ற துன்பகரமான நேரத்தில் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதோடு, நரேஷ் கோயலும் சிறுகுடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு சால்வே நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

நரேஷ் கோயல் விரும்பிய தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை உயர்நீதிமன்றம், கடந்த 6ம் தேதி நரேஷ் கோயலுக்கு இரண்டு மாத காலத்திற்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி ₹1 லட்சம் செலுத்தியதை அடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மும்பையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் அவர் தங்கியிருக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x