Published : 14 May 2024 04:58 AM
Last Updated : 14 May 2024 04:58 AM

ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும்: பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி

ஹாஜிபூர் (பிஹார்): அரசியல்வாதிகளிடமிருந்து சோதனையின்போது அமலாக்கத் துறைகைப்பற்றிய ரூ.2,200 கோடி நாட்டின் ஏழைகளுக்கு சொந்தமான பணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து பேசியதாவது: அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. அவர்கள் என்னதான் கூறினாலும் ஊழலுக்கு எதிரான எனது அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும். அரசியல்வாதிகளுக்கு எதிரான சோதனையின்போது மீட்கப்படும் பணம் நாட்டின் ஏழைகளுக்கு சொந்தமானது.

அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் ஏன் ஓலமிடுகிறார்கள் என்ற ரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பள்ளிக்கூடபையில் இருந்த ரூ.35 லட்சத்தை மட்டுமே அமலாக்கத் துறைகைப்பற்றியது. நான் பொறுப்பேற்றது முதல் அரசியல்வாதிகளிடமிருந்து சோதனையின்போது ரூ.2,200 கோடிக்கும் அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளது. இதனை 70 சிறிய டிரக்குகளில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இவ்வளவு பணமும் ஏழைகளுக்கு சொந்தமானது.

எதிர்க்கட்சியினர் தங்களது சந்ததியினரை மேம்படுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டவர்கள். ஆனால் எனக்கு அதுபோல் இல்லை. எனக்கு வாரிசுகள் கிடையாது. சாமானிய மக்களே எனது வாரிசுகள். ஆட்சியில் இருந்தபோது முறைகேடான பணப்பரிமாற்றம் மற்றும் ஆட்கடத்தலை செய்ய அனுமதித்த காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி போன்ற கட்சிகள் தங்களின் வாக்குவங்கி அரசியலுக்காக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுகளை வாரி வழங்கின. நான் இருக்கும் வரை அதுபோன்று நடக்க அனுமதிக்க மாட்டேன்.

பிஹாரில் ஆர்ஜேடி ஆட்சியின்போது கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் அன்றாடம் சர்வசாதாரண நிகழ்வாக இருந்தன. ஆனால், தற்போதுநிலைமை மாறியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சமூக நீதிக்காக போராடுகிறது. 60 சதவீத மத்திய அமைச்சர்கள் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள்.

ராமர் கோயில் விவகாரத்தில் அருவருப்பான அறிக்கைகளை எதிர்க்கட்சிகள் வெளியிடுவதன் மூலம் அவர்கள் மக்களின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துகின்றனர்.

மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்க மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x