Published : 13 May 2024 05:56 AM
Last Updated : 13 May 2024 05:56 AM

சந்தேஷ்காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ரூ.2,000 வழங்கியதாக புகார்: வீடியோ போலியானது என பாஜக கருத்து

கோப்புப்படம்

கொல்கத்தா: சந்தேஷ்காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டதாக மண்டல தலைவர் போல் தோற்றமளிக்கும் நபர் கூறும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு, பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இதே நிலை மேற்குவங்கத்திலும் காணப்படுகிறது. சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எல்லாம் நாடகம் என சந்தேஷ்காலி மண்டல தலைவர் கங்காதர் கயல் போல் தோற்றமளிக்கும் நபர் கூறும் வீடியோ கடந்த வாரம் வெளியானது.

தற்போது அதே நபர், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக்குக்கு எதிராக சந்தேஷ்காலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் சந்தேஷ்காலியில் 50 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்குள்ள போராட்டக்காரர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள். இவர்களை தேர்தலில் திருப்திபடுத்த எங்களுக்கு ரூ.2.5 லட்சம் தேவை’’ என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ உண்மைதானா என்பதை அறிய மண்டல தலைவர் கங்காதர் கயலை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த வீடியோ போலி என பாஜக கூறுகிறது. திரிணமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரிஜு தத்தா கூறுகையில், ‘‘சந்தேஷ்காலி விவகாரம் குறித்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன’’ என்றார்.

வெள்ளை காகிதத்தில் கையெழுத்து: பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் ஒருவர், தன்னை புகார் கொடுக்கும்படி பாஜக தலைவர்கள் வெள்ளை காகிதத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு வற்புறுத்தினர் என கூறிய வீடியோவும் ஏற்கனவே வெளியானது. டெல்லியில் குடியரசுத்தலைவரை சந்திக்க அழைத்துசெல்லப்பட்ட பாலியல் வன்கொடு மைக்கு ஆளானவர்களை தனக்கு தெரியாது என பசிர்ஹட் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகா பத்ரா கூறிய வீடியோவும் ஏற்கனவே வெளியானது.

திரிணமூல் காங்கிரஸ் புகார்: இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார்கள் அளிக்க சந்தேஷ்காலி பெண்களை, தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா வற்புறுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘தேர்தலை முன்னிட்டு போலி வீடியோக்களை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் சந்தேஷ்காலி பெண்களின் கவுரவம் பற்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எந்த கவலையும் இல்லை. தற்போது வெளியாகியுள்ள அனைத்து வீடியோக்களும் போலியானது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x