Last Updated : 08 Apr, 2018 09:37 PM

 

Published : 08 Apr 2018 09:37 PM
Last Updated : 08 Apr 2018 09:37 PM

எம்எல்ஏ மீது பலாத்காரப் புகார்: யோகி ஆதித்யநாத் வீட்டு முன் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி

 பாஜக எம்எல்ஏ தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன் தீக்குளித்து தற்கொலை செய்ய இளம் பெண் ஒருவர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பங்கார்மவு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்.

குல்தீப் சிங் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறி 18 வயது இளம் பெண் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கவுதம்பாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அங்கிருந்த போலீஸ் நிலைய அதிகாரி விஜய் சென் சிங் புகாரை வாங்க மறுத்துவிட்டார். ஏறக்குறைய அவர் பல முறை போலீஸ் நிலையததில் முறையீட்டும் புகாரைப் பெற மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, இன்று காலை முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன் இருக்கும் கோல்ப் மைதானத்தில் அந்த இளம் பெண் வந்தார். தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அதற்குள் அங்கிருந்த போலீஸார், பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை மீட்டு தற்கொலையில் இருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இளம் பெண் புகார் குறித்து எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், ''அந்த இளம்பெண் கூறும் புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. என்னுடைய அரசியல் எதிரிகள் எனது சமூக அந்தஸ்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது குற்றம் இருந்தால், எந்த கடுமையான தண்டனையையும் அனுபவிக்கவும் தயார். அதேசமயம் பொய் புகார் கொடுத்தவர்களையும் தண்டிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அந்த இளம்பெண் லக்னோ போலீஸ் டிஜிபி ராஜிவ் கிருஷ்ணா முன் ஆஜராகி தனது புகாரை தெரிவித்தார். எம்எல்ஏ மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x