Last Updated : 25 Apr, 2018 03:30 PM

 

Published : 25 Apr 2018 03:30 PM
Last Updated : 25 Apr 2018 03:30 PM

வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாஜக எம்.பி., எம்எல்ஏக்களுக்கு முதலிடம்

 

நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாஜகவின் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகி உள்ளன.

சட்ட ஆணையத்தின் அறிக்கை எண் 267, மார்ச் 2017-ன்படி, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு என்ன என்பது எந்த சட்டங்களிலும் வரையறுக்கப்படவில்லை. எனினும், சில மாநில அரசு சட்டங்களில் பேச்சு சுதந்திரத்தில் வராதவை என குறிப்பிட்ட பேச்சுகளைச் சேர்த்துள்ளது. இதன்படி, முறைகேடாகப் பேசுவது, அவமானப்படுத்தும் வகையிலான பேச்சு, தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுவது, குறிப்பிட்ட சமூகத்தினரை இனம், மொழி, மதம், சமூகம், பிறப்பு, குடியிருப்பு, மொழி, பிராந்தியம், ஆபாசநிலை ஆகிய வகையில் வேறுபடுத்திப் பேசுவது ஆகியவை வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் சிக்கிய நாட்டின் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது பதிவான வழக்குகளின் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. இவற்றை தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பினர் ஆராய்ந்து இன்று வெளியிட்டுள்ளனர். இதில், தற்போதுள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களில் 58 பேர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வழக்குகள் பதிவாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

எம்.பி.க்கள் விவரம்

நாடாளுமன்றத்தின் மக்களவை எம்.பி.க்களில் 15 பேர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வழக்குகள் உள்ளன. மற்றொன்றான மாநிலங்களவையில் இருந்து எந்த எம்.பி. மீதும் இந்த வழக்குகள் இல்லை. மிக அதிகமாக பாஜக எம்.பி.கள் மீது 10 வழக்குகள் பதிவாகி உள்ளன. அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்), தெலங்கானா மற்றும் ஆந்திராவின் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்), அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிம் (ஏஐஎம்ஐஎம்), சிவசேனா மற்றும் தமிழகத்தின் பாமக ஆகிய கட்சிகள் மீது தலா ஒரு வழக்கு பதிவாகி உள்ளது.

எம்எல்ஏக்கள் விவரம்

எம்எல்ஏக்களில் மொத்தம் 43 பேர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகமாக பாஜகவின் 17 எம்எல்ஏக்கள் மீதும், டிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏக்கள் தலா ஐந்து பேர் மீதும் வழக்குகள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியில் 3 பேர் மீதும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சி எம்எல்ஏக்கள் மீது தலா 2 வழக்குகளும் பதிவாகி உள்ளன. திமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எம்எல்ஏக்கள் மீது தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் கூட வெறுப்புணர்வு வழக்கில் சிக்கியுள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள்

வெறுப்புணர்வு வழக்கில் சிக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களில் ஏஐஎம்ஐஎம்-ன் அசாசுத்தீன் உவைஸி மற்றும் அசாமின் ஏஐயுடிஎப் பத்ரூத்தீன் அஜ்மல் ஆகிய இருவர் இடம் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர்களில் பாஜகவின் உமாபாரதி மற்றும் எட்டு மாநிலங்களின் அமைச்சர்கள் மீது இந்த வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

மாநில வாரியான விவரம்

இந்த புள்ளிவிவரம் மாநிலவாரியாகவும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், தெலங்கானா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவதாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரம் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்திற்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது.

கட்சி ரீதியான பட்டியல்

எம்.பி. மற்றும் எல்எல்ஏக்கள் சேர்த்து கட்சி ரீதியானப் பட்டியலும் வெளியாகி உள்ளது. இதில், முதலிடம் பெற்ற பாஜகவில் 27 வழக்குகளும், இரண்டாவது இடத்தில் ஏஐஎம்ஐஎம் மற்றும் டிஆர்எஸ் கட்சியினர் மீது தலா 6 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நான்காவதாக தெலுங்கு தேசம் மற்றும் சிவசேனா கட்சியினர் தலா 3 வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

இதற்கு முன் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் மற்றும் சட்டப்பேரவை எல்எல்ஏக்களின் பட்டியலையும் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பினரால் வெளியிடப்பட்டதில் பாஜகவினர் முதலிடம் வகித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x