Published : 23 Apr 2018 08:26 PM
Last Updated : 23 Apr 2018 08:26 PM

சினிமாவில் வரும் நகைச்சுவை நிஜமானது: ‘தலை- கால்’ புரியாமல் தவறாக நடந்த அறுவை சிகிச்சை

டெல்லியில் அரசு மருத்துவமனையில் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவருக்கு, காலில் அறுவை சிகிச்சை செய்த டாக்டரால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அந்த டாக்டர் மீது விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி சிவில் லைன்ஸ் ஏரியா பகுதியில் அரசு சார்பில் சுஸ்ருதா விபத்து சிகிச்சை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருதத்துவனைக்கு கடந்த வியாழக்கிழமை விபத்தில் அடிபட்டு வீஜேந்திரா என்பவர் தலை,முகத்தில் பலத்த காயத்துடன் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக தலை, முகத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. வீரேந்திரர் என்பவர் விபத்தில் காயம் ஏற்பட்டு காலில் எலும்பு முறிவுடன் அதே மருத்துவமனையில் மற்றொரு அறுவைசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய வீரேந்திரர் அறைக்குச் செல்ல வேண்டிய மூத்த டாக்டர் தலையில் காயம் பட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயேந்திரர்அறைக்கு வந்தார்.

அந்த அறுவை சிகிச்சை அறைக்குச் சென்ற மூத்த டாக்டர் தலையில் காயம்பட்டிருந்த நோயாளிக்கு அனஸ்தீஸியா(மயக்கமருந்து) கொடுத்து அவருக்குத் தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக காலில் அறுவை சிகிச்சை செய்தார்.

அந்த நோயாளியின் நன்றாக, ஆரோக்கியமாக இருந்த காலில் துளையிட்ட டாக்டர், வலுவாக இருந்த எலும்புகளை உடைத்து, அதில் ஸ்குரூ, போல்ட் வைத்து அறுவை சிகிச்சையை முடித்தார்.

இதையடுத்து, இந்த விஷயம் மூத்த மருத்துவர்கள், மருத்துமனை டீன் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, தவறாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் இனிமேல் மூத்த டாக்டரின் உதவி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அஜய் பாஹல் கூறுகையில், ஒரு மூத்த டாக்டர் ஒருவர் தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிக்கு, காலில் அறுவை சிகிச்சை செய்துவிட்டார். ஆனால் மயக்கமருந்து கொடுத்திருந்ததால், அந்த நோயாளிக்கு அது தெரியவில்லை. அதன்பின்தான் தெரிந்தது. இதையடுத்து, அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த டாக்டர் வேறு எந்த அறுவைசிகிச்சையும் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30வயதுமதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. ஆனால், டாக்டர் ஒருவர் தவறுதலாக அந்தப் பெண்ணுக்கு டயாலிசிஸ் செய்த சம்பவம் நடந்து பெரிய பிரச்சினையானதும் குறிப்பிடத்தக்கது.ஆனால், அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஆதாரங்கள் அனைத்தும் அழித்து வழக்கில் இருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x