Last Updated : 23 Apr, 2018 12:59 PM

 

Published : 23 Apr 2018 12:59 PM
Last Updated : 23 Apr 2018 12:59 PM

‘‘அயோத்தியில் ராமர் கோயில் கனவு விரைவில் நனவாகும்’’ - சொல்கிறார் விஎச்பி புதிய தலைவர்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவு விரைவில் நனவாகும் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவர் சதாசிவ் கோக்ஜே தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக முன்னாள் நீதிபதியும், இமாச்சலப்பிரதேச மாநில முன்னாள் ஆளுநருமான சதாசிவ் கோக்ஜே வெற்றி பெற்றார். முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியாவின் ஆதரவாளர் ரெட்டி தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து பிரவீன் தொகாடியா விஎச்பி அமைப்பில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் விஎச்பி அமைப்பின் புதிய தலைவர் சதாசிவம் கோக்ஜே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகருக்கு இன்று சென்றார். அங்குள்ள அனுமன் கோயிலில் கோக்ஜே வழிபட்டார். அதன்பின் கோயிலின் அர்ச்சகர்கள், சன்யாசிகள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் நிருபர்களிடம் கோக்ஜே கூறுகையில்,

‘‘அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏராளமான முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முன், அங்குள்ள குழந்தை ராமர் சிலைக்கு உரிய பூஜைகள் செய்ய வேண்டும். அதற்காகவே இங்கு வந்தேன்.

விரைவில் நாடுமுழுவதும் உள்ள சாதுக்கள், சன்னியாசிகளுடன் கோயில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதன்பின் ராமர் கோயில் கட்டும் பணியை இயக்கமாக முன்னெடுக்க இருக்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான இந்து மக்களின் கனவு விரைவில் நனவாகும். ராமர் கோயில் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இருந்து சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் எதிர்மறையான தீர்ப்பை அளிக்கும் பட்சத்தில், மத்திய அரசு அடுத்த கட்டநடவடிக்கையை எடுத்து கோயில் கட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதாவது, அயோத்தியில் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, கோயில் கட்டுவதை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x