Published : 25 Apr 2024 08:29 AM
Last Updated : 25 Apr 2024 08:29 AM

பரம்பரை சொத்து வரி: காங். பிரமுகர் சாம் பிட்ரோடா கருத்தால் சர்ச்சையும் தாக்கமும்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு தலைவரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகருமான சாம் பிட்ரோடா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், “அமெரிக்காவில் பாரம்பரை சொத்து வரி சட்டம் அமலில் உள்ளது. உதாரணமாக ஒருவரிடம் 10 கோடி டாலர் மதிப்பிலான சொத்துஇருந்தால், அவர் உயிரிழக்கும்போது 55% சொத்தை அரசு எடுத்துக் கொள்ளும். மீதமுள்ள 45% சொத்துகளை மட்டுமே அவருடைய வாரிசுகள் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும். இதுஒரு நல்ல சட்டம். இது எனக்கு நியாயமாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்” என பிட்ரோடா பேசி உள்ளார்.

இவரது இந்தக் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாநகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “நடுத்தர மக்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என இளவரசர் (ராகுல்) மட்டுமின்றி மன்னர் குடும்பத்தின் ஆலோசகரும் (சாம் பிட்ரோடா) முன்பு தெரிவித்திருந்தார். அவர் இப்போது, பரம்பரை சொத்து வரிவிதிக்க வேண்டும் என்றும் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்துக்கும் வரி விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான உள்நோக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு முழுமையாக கிடைக்காது. மாறாக அதை காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து பறித்து வேறு ஒருவருக்கு வழங்கிவிடும். நீங்கள் வாழும்போது மட்டுமல்லாமல் இறந்த பிறகும் உங்கள் சொத்தை கொள்ளையடிப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரம்” என்றார்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டது. முதலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தனிநபர்களின் சொத்து பற்றி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதுபோல நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே கூறியிருந்தார். இப்போது, அமெரிக்க சட்டத்தை மேற்கோள் காட்டி, செல்வப் பகிர்வு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என சாம் பிட்ரோடா கூறிய வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது தனி நபர் உயிரிழந்த பிறகு அவருடைய 55 சதவீத சொத்தை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை பிரதமர் மோடி கையில் எடுத்த நிலையில், ராகுல், சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்ததலைவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால், இன்று சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தை நாட்டுக்கு அம்பலப்படுத்தி விட்டது. பொதுமக்களின்சொத்துகளை கணக்கெடுத்து, அதைஅரசுடைமையாக்கி வேறு நபர்களுக்கு (சிறுபான்மையினருக்கு) பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது” என்றார்.

நடுத்தர குடும்பத்தினரை பாதிக்கும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேசிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “வாழும்போதும், இறந்த பிறகும் (பரம்பரை சொத்து வரி) வரி வசூலிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் திட்டம்.

இதனால் பொதுமக்கள் தாங்கள் சேமித்து வைத்துள்ள சொத்துகளை தங்கள் பிள்ளைகளுக்கு முழுமையாக வழங்க முடியாது. இது நடுத்தர குடும்பத்தினரை வெகுவாக பாதிக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்தது போல திட்டமிட்ட மற்றும் சட்டபூர்வ கொள்ளை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்” என பதிவிட்டுள்ளார்.

அமித் மால்வியா எதிர்ப்பு: பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில், “இந்தியாவை அழிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாம் முறையாக வரி செலுத்திய பிறகும் சேர்த்து வைத்துள்ள சொத்தில் 50 சதவீதத்தை பிடுங்கி வேறு நபர்களுக்கு பிரித்து அளிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கருத்து அல்ல: கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசியல் சாசனம் உள்ளது. அதை மீறி எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு அதுபோன்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. அவருடைய கருத்துகளை எங்கள் வாயில் ஏன் திணிக்கிறீர்கள்.

வெறும் ஓட்டுக்காக இந்த விளையாட்டுகளை எல்லாம் அவர் (பிரதமர்) விளையாடி வருகிறார்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல” என்றார்.

இதுகுறித்து சாம் பிட்ரோடா எக்ஸ் தளத்தில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரி வசூலிப்பது குறித்து நான் தெரிவித்த கருத்தை ஊடகங்கள் திரித்து கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பிரதமர் மோடியின் பொய் பிரச்சாரத்தை திசை திருப்பவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி மற்றும் தங்கம் முழுவதும் பறிக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் கருத்து உண்மை அல்ல” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x