Published : 22 Apr 2024 02:56 PM
Last Updated : 22 Apr 2024 02:56 PM

“மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் கண்ணியம் குறைந்ததில்லை” - ‘சொத்து’ பேச்சு மீது கார்கே சாடல்

புதுடெல்லி: "இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு இரையாக்கப் போவதில்லை" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானில் பிரதமர் மோடி கண்டித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "மோடியின் பீதி நிறைந்த பேச்சு, முதல்கட்ட தேர்தல் முடிவுகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டுகிறது. மோடி பேசியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசை திருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. சங் பரிவார் அமைப்புகளில் கற்றுக்கொண்டதை மோடி தற்போது செய்துள்ளார். அதிகாரத்துக்காக பொய் பேசுவதும், ஆதாரமற்ற விஷயங்களைப் பேசுவதும், எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பயிற்சியின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.

இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு இரையாகப் போவதில்லை. எங்களின் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவம் வழங்குவதை பற்றியும், நீதி வழங்குவதை பற்றியும் பேசுகிறது. ஆனால், கோயபல்ஸ் வடிவில் உள்ள சர்வாதிகாரியின் சிம்மாசனம் இப்போது அசைந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது” என்று மோடியை கடுமையாக சாடியுளளார் கார்கே.

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏமாற்றம் கிடைத்த பிறகு, பொய்கள் பலன் தராததால் தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. யாருடைய சொத்தும் பறிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பேச்சில், வளர்ச்சியின் பலன்களில் சிறுபான்மையினர் சமமாக பங்கு பெறும் வகையில் புதுமையான திட்டங்களை தீட்ட வேண்டும் என்றே குறிப்பிட்டார்” என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்து அல்லது முஸ்லிம் என்ற வார்த்தை எங்காவது எழுதப்பட்டுள்ளதா என்பதை பிரதமர் மோடியால் காண்பிக்க முடியுமா? அவருக்கு சவால் விடுக்கிறேன். அவரால் காண்பிக்க முடியுமா? இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் ஆகியோருக்கான நீதியைப் பற்றி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசியது என்ன?: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று ஆவேசமாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x