Published : 21 Apr 2024 03:16 PM
Last Updated : 21 Apr 2024 03:16 PM

"டெக் சிட்டியில் இருந்து டேங்கர் சிட்டி" - பெங்களூரு வளர்ச்சி குறித்து பிரதமர், சித்தராமையா வார்த்தை மோதல்


பெங்களூரு: "பெங்களூருவை டெக் சிட்டியில் இருந்து டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது" என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், "பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் வறட்சி ஏற்பட்ட போதும் பிரதமர் மோடி எங்கே போனார்?" என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி முதலீட்டுக்கு எதிரானது, தொழில்முனைவோருக்கு எதிரானது, தனியார் துறைக்கு எதிரானது, வரி செலுத்துபவர்களுக்கு எதிரானது, செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு எதிரானது.

இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் மையமாக மாற்றுவேன். ஆனால் காங்கிரஸும் இண்டியா கூட்டணியினரும் மோடியை அகற்றுவோம் என்று கூறுகிறார்கள். இதேபோல் 5ஜிக்கு பிறகு 6ஜியை தொடங்குவோம் என்று நான் உத்தரவாதமாக கூறினால் அவர்கள் மோடியை அகற்றுவோம் என்றே பேசுகிறார்கள்.

கர்நாடக மக்களின் கனவுகளை நிறைவேற்ற பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றிணைந்துள்ளது. உங்கள் கனவுகள் தான் எனது தீர்மானம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனது வாழ்க்கை உங்களுக்கும் நாட்டுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047க்கு 24X7 உறுதியளிக்கிறேன். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எனது இலக்கு.

டெக் சிட்டியை(பெங்களூரு) டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பெங்களூரு பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே பெங்களூருவை வேகமாக முன்னேற்றி வருகின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வளர்க்கும் சிந்தனைகள் மற்றும் சித்தாந்தம் மிகவும் ஆபத்தானது. பெண்கள் தாக்கப்படுகிறார்கள். சந்தைகளில் குண்டுகள் வெடிக்கிறார்கள். மதப் பாடல்களைக் கேட்டதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை அல்ல. சகோதர சகோதரிகளே காங்கிரஸைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்று கடுமையாக சாடினார்.

பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த, முதல்வர் சித்தராமையா, "மக்களுக்காக 24x7 நேரமும் உழைக்கிறேன் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ஆனால் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியின் போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்?. அப்படியானால், இந்த '24x7' படத்தின் உண்மைக் கதை என்ன? எல்லாமே விளம்பரம் தான் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி உண்மையிலேயே விவசாயிகளின் நலனை விரும்புகிறாரா என்பதை தனது மனசாட்சியிடமே அவர் கேட்டுகொள்ள வேண்டும். டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்தனர். விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு இன்னும் தயாராக இல்லை. விதைகள் மற்றும் உரங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது மத்திய அரசு.

பாஜக ஆரம்பத்திலிருந்தே விவசாயிகளுக்கு எதிரானது. முதலாளிகள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளின் கட்சி பாஜக. இந்த கட்சியின் டிஎன்ஏவில் விவசாயிகளுக்கு எதிரான விஷம் உள்ளது. நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடக விவசாயிகளுக்கு என்ன கொடுத்தது?.

கர்நாடக விவசாயிகள் தங்களின் நலம் விரும்பி யார் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள். விவசாயிகளுக்கு எதிரான சக்திகளுக்கு தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x