Published : 24 Apr 2018 09:26 AM
Last Updated : 24 Apr 2018 09:26 AM

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஸ்கூட்டரில் சென்ற மாடல் அழகியின் ஆடையை இழுத்து வம்பு செய்த இளைஞர்கள்

ஸ்கூட்டரில் சென்ற மாடல் அழகியின் ஆடையை இழுத்து 2 இளைஞர்கள் வம்பு செய்துள்ளனர். இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து காய மடைந்தார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் நடிகையும், மாடல் அழகியுமான ஷர்மா ஆகர்ஷி. மாடலிங் செய்து வருகிறார். மேலும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் பிரபலமாக உள்ளார். பிளாக் எழுதும் பழக்கமும் உள்ளவர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் ஷர்மா ஆகர்ஷி. அப்போது நடுவழியில் 2 இளைஞர்கள், அவரை பைக்கில் பின்தொடர்ந்து வம்பு செய்தனர். அவர் அணிந்திருந்த ஆடையை இழுத்தும் அவர்கள் கலாட்டா செய்துள்ளனர். மேலும் அவரிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.

பயமாக இருந்தபோதும், துணிச்சலான பெண்ணான ஷர்மா ஆகர்ஷி பைக்கில் உள்ள இளைஞர்களைப் பிடிக்க முயன்றார். அதற்குள் அவரது ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் அவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அந்த 2 இளைஞர்களும் தப்பியோடி விட்டனர். அப்போது பின்னால் வந்த நபர் ஒருவர், ஷர்மா ஆகர்ஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு நியாயம் கேட்டுள்ளார் ஷர்மா. இந்த சம்பவம் இந்தூரில் பிரபலமாக உள்ள வணிக வளாகம் முன்பு நடந்துள்ளது.

அவர் மேலும் கூறியதாவது: நான் அணிந்திருந்த ஆடையை இழுத்து அவர்கள் வம்பு செய்தனர். நான் அவர்களை விரட்ட முயன்றபோது எனது வாகனம் கீழே விழுந்து காயமடைந்தேன்.

என்னைக் காப்பாற்றிய ஒருவர், நீ அணிந்திருந்த பாவாடையைப் பார்த்துத்தான் அவர்கள் வம்பு செய்துள்ளனர் என்றார். நான் என்ன அணியவேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லத் தேவையில்லை. இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்யவுள்ளேன்.

அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இருந்தபோதும் இதை நான் விடப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் இதுதொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று இந்தூர் பகுதி போலீஸ் டிஐஜி ஹரி நாராயண் சாரி மிஸ்ரா தெரிவித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x