Published : 12 Apr 2024 06:13 PM
Last Updated : 12 Apr 2024 06:13 PM

2004-ன் முடிவுதான் பாஜகவுக்கு கிட்டும்: சசி தரூர் கணிப்பும், முன்வைக்கும் காரணங்களும்

தேர்தல் பிரச்சாரத்தில் சசி தரூர் | கோப்புப் படம்

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு 2004 மக்களவைத் தேர்தலில் என்ன முடிவு கிடைத்ததோ அதேபோன்ற ஒரு முடிவுதான் இந்த தேர்தலிலும் அக்கட்சிக்குக் கிடைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் போன்று இருக்கிறது என பிரதமர் மோடி கூறி இருக்கிறார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், அவரது இதுபோன்ற பேச்சுக்கள் இங்கே (கேரளாவில்) எடுபடாது. ஒருவேளை அவர்கள் வேறு ஏதாவது முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம்.

இங்கே வந்து முஸ்லிம் லீக் என்றோ, ராமர் கோயில் என்றோ அவர்கள் பேசலாம். ஆனால், வேலைவாய்ப்புக்கான வாக்குறுதி என்ன ஆயிற்று? விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று என்றுதான் மக்கள் கேட்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் அவர்கள் நிறைவேற்றினார்களா? இங்கு பாஜகவின் சாதனை என்பது மிகவும் மோசமாக உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், ஆயுர்வேத தேசிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும், தேசிய ஊனமுற்றோர் ஆய்வு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என கேரளாவுக்கு பாஜக 3 வாக்குறுதிகளை அளித்தது. அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

திருவனந்தபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெரும் பணக்காரர் என்பது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் மூலம் தெரிகிறது. ஆனால், குறைவாகத்தான் வரி செலுத்தி உள்ளார். இது அவர் மீது தவறான பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது, கம்யூனிஸ்ட் வேட்பாளரைத் தோற்டித்து நான் வெற்றி பெற்றேன். ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களாக பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தே நான் வெற்றி பெற்றுள்ளேன். பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. அவர்கள் வலுவான வீரராக மாறியதில் ஆச்சரியமில்லை.

திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் மந்தமானது. பாஜக, இந்தப் போட்டியை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இது பாஜகவுக்கு பலமான தொகுதி. கேரளாவில், அவர்களுக்கு எந்த தொகுதியிலாவது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், அது இந்த தொகுதியாகத்தான் இருக்கும். நாங்களும் சமமான வீரியத்துடனும் நம்பிக்கையுடனும் போட்டி போடுகிறோம்.

பாஜக தற்போது பீதியில் இருக்கிறது. கெஜ்ரிவாலை கைது செய்தது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் தாங்கள் தோற்றுப் போவதை அறிந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் வேதனை மற்றும் விரக்தியின் அறிகுறிகள். இந்தத் தேர்தலின் முடிவில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் பேசுவதெல்லாம் வெறும் பிரச்சார தந்திரம். பல மாநில தேர்தல்களின்போதும்கூட அவர்கள் இதுபோன்ற தந்திரங்களைக் கையாண்டு தோற்றிருக்கிறார்கள். அவர்களின் கணிப்பைவிட அவர்கள் குறைவான வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

பாஜக பெரும்பான்மையை இழக்க வேண்டுமென்றால், தற்போதைய எண்ணிக்கையில் இருந்து அக்கட்சி 30 இடங்களை இழக்க வேண்டும். ஆனால், அவர்கள் 50 - 60 இடங்களை இழப்பார்கள் எனத் தெரிகிறது. என்னுடைய புரிதல் என்னவென்றால் எதிர்க்கட்சிகளுக்குத்தான் இம்முறை பெரும்பான்மை கிடைக்கும். கடந்த 2004 தேர்தலில் கிடைத்த முடிவுதான் இம்முறை பாஜகவுக்குக் கிடைக்கும்.

ஜனநாயக சக்திகள் பெரும்பான்மை இடங்களை வெல்லும் என்பதை ஜூன் 4-ஆம் தேதி தெரியப்படுத்தும். அதிர்ச்சிகரமான தோல்வியை நாங்கள் பாஜகவுக்குக் கொடுப்போம். பாஜக மீண்டும் 2004-ன் நிலைக்குத் திரும்பும். 'இந்தி - இந்துத்துவா - இந்துஸ்தான்' எனும் பாஜகவின் வியூகம் வேலை செய்யாது. ஏனெனில், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் காணவே அனைவரும் விரும்புகிறார்கள்” என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x