Published : 11 Apr 2024 05:04 AM
Last Updated : 11 Apr 2024 05:04 AM

அமெரிக்காவில் காணாமல் போன ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் உடல் மீட்பு

அப்துல் முகமது அராபத்

ஹைதராபாத்: ஹைதராபாத் நாச்சாரம் பகுதியின்அம்பேத்கர் நகரை சேர்ந்த முகமதுசலீமின் மகன் அப்துல் முகமது அராபத் (25). இவர் ஐ.டி. பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு, உயர் கல்விக்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஓஹியோ மாகாணம், கிளிப்லாந்து பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வந்தார். அராபத் கடைசியாக கடந்த மார்ச் 7-ம் தேதி பெற்றோருடன் செல்போனில் பேசினார். அதன் பிறகு அவரிடம் இருந்து அழைப்பு வராததால் அவரது பெற்றோர் பரிதவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 20-ம் தேதி, அமெரிக்காவில் இருந்து மர்ம நபர் ஒருவர் அராபத்தின் தந்தை சலீமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அரை மணி நேரத்தில் 1,200 அமெரிக்க டாலர்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் உங்கள் மகனின் கிட்னியை விற்று விடுவோம்” என்று மிரட்டியுள்ளார். அதன் பிறகு தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிக்கரையில் இருந்து மாணவர் அராபத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக கிளிப்லாந்து போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் அராபத்தின் தந்தை சலீம் கூறியதாவது: எனது மகனுக்கும், அவன் தங்கியுள்ள அறையில் உள்ளவர்களுக்கும் இடையே சில பிரச்சினைகள் இருப்பதாக ஏற்கெனவே கூறியுள்ளான். அராபத் அடிக்கடி அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிக்கு செல்வது வழக்கம். இப்போது அதே இடத்தில் அவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அந்த இடத்தில் அவனது லேப்-டாப் , அடையாள அட்டை போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. போதைமருந்து கும்பல்தான் அராபத்தைகொலை செய்ததா, இது கொலையா, தற்கொலையா, என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க போலீஸார் கூறுகின்றனர். இவ்வாறு சலீம் கண்ணீர் மல்க கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x