Last Updated : 09 Apr, 2024 11:53 AM

 

Published : 09 Apr 2024 11:53 AM
Last Updated : 09 Apr 2024 11:53 AM

பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: நீரை வீணடித்தால் ரூ.5,000 அபராதம்

பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

பெங்களூரு: பெங்களூருவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், டேங்கர் லாரி நீரின் விலை ரூ.1500 வரை அதிகரித்துள்ளது. அதேபோல நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தோட்டநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் கடும் த‌ண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிப்பதற்கும், அன்றாட பயன்பாட்டுக்கும் நீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு பேப்பர் பிளேட், கப் போன்றவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிகழாண்டில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் திணறி வருகிறது. இதனால் டேங்கர் லாரி நீரின் விலை ரூ.1500 வரை அதிகரித்துள்ளது.

வறண்ட ஆழ்துளை கிணறுகள்: “இந்நிலையில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், ''பெங்களூருவில் 80 சதவீத ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனது வீட்டில் இருக்கும் ஆழ்துளை கிணற்றிலும் நீர் இல்லை. காவிரி நீரும் வற்றியுள்ளதால் நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. டேங்கர் லாரி நீரின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அதனால் அரசு அனைத்து டேங்கர் லாரிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. டேங்கர் லாரி நீருக்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயம் செய்துள்ளது. அடுத்த நான்கு மாத காலத்துக்கு 200 தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி 5 கிமீ தூரத்துக்கு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிக்கு ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிக்கு ரூ.700, 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 5 கிமீ முதல் 10 கிமீ வரையிலான தூரம் என்றால் 6 ஆயிரம் லிட்டர் டேங்கருக்கு ரூ.750, 8 ஆயிரம் லிட்டர் டேங்கருக்கு ரூ.850, 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.1,200 வசூலிக்க வேண்டும். இதற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் டேங்கர் லாரி நிறுவனத்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌ப்படும்” எனத் தெரிவித்தார்.

கடும் கட்டுபாடுகள்: இதனிடையே பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், “பெங்களூரு மாநகருக்காக காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீர் பெறப்படுகிறது. அதே வேளையில் மாநகருக்கு ஒரு நாளைக்கு, இன்னும் 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த பற்றாக்குறையால் தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாகனம் கழுவுதல், தோட்டம் அமைத்தல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் கூடுதலாக ரூ.500 சேர்த்து வசூலிக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x