Published : 04 Apr 2024 02:53 PM
Last Updated : 04 Apr 2024 02:53 PM

காங்கிரஸில் இருந்து விலகிய கவுரவ் வல்லப் பாஜகவில் ஐக்கியம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறி அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று கடிதம் எழுதிய கவுரவ் வல்லப், டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நான் எழுதிய கடிதத்தை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பதிவிட்டுள்ளேன். அந்த கடிதித்தில், எனது இதயத்தில் இருந்த வலிமை தெரிவித்துள்ளேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதில் இருந்தே இந்த கேள்விகள் என் மனதில் இருந்தன. அயோத்தி ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டபோதும், விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் சனாதன தர்மத்துக்கு எதிராக கேள்விகளை எழுப்பியபோது காங்கிரஸ் கட்சி பதில் அளிக்காமல் அமைதி காத்தது. தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறேன். பாஜக எனது திறமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், ''திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்பவர்களை அவதூறு பேசவோ என்னால் முடியாது. அதனால் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்.

கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தவறான பாதைக்குச் சென்றுவிட்டது. ஒரு பக்கம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறது. இன்னொரு பக்கம் இந்து சமூகத்தை கட்சி எதிர்க்கிறது. இந்த மாதிரியான கொள்கைகள் கட்சியைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான பார்வையை விதைக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு மதத்தை மட்டுமே ஆதரிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை மக்களுக்குக் கடத்துகிறது. இது காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது.

காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்துமே தேசத்துக்கான வளத்தைச் சேர்ப்பவர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றன. இன்று நம் மத்தியில் பொருளாதாரத்தில் தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் இருக்கின்றது. இவற்றுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் கொடுத்துள்ளன. நம் தேசத்தில் தொழில் செய்து பணம் ஈட்டுவது அத்தகைய பெரிய தவறா என்ன?

நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது எனது இலக்கு என்னுடைய திறமையை பொருளாதார விவகாரங்களின் மீது நாட்டு நலன் சார்ந்து செலுத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும். பொருளாதாரப் பார்வைகள் கொண்ட ஒரு தேர்தல் அறிக்கையைக் கொடுத்திருக்கலாம். ஆனால் கட்சியில் இது எடுபடவில்லை. என்னைப்போன்ற பொருளாதார பார்வை கொண்ட நபரை அழுத்தி மூச்சுமுட்டச் செய்திருக்கிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியரான கவுரவ் வல்லப் முதன்முதலில் 2019-ல் ஜார்க்கண்ட் மாநில ஜம்ஷட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தேர்தல் அரசியல் களம் கண்டார். 2023 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கவுரவ் வல்லப் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x