Published : 02 Apr 2024 06:55 PM
Last Updated : 02 Apr 2024 06:55 PM

“சிறையில் 3 சகோதரர்கள் இருப்பதால் முழு மகிழ்ச்சி இல்லை” - ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மனைவி

அனிதா சிங்

புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், “எனது மூன்று சகோதரர்கள் இன்னும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதால், இது முழுமையான மகிழ்ச்சியில்லை" என்று அவரது மனைவி அனிதா சிங் கூறியுள்ளார்.

மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்த பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனிதா, "இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. நமது நீதித் துறை செயல்பாட்டின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

எனது 3 சகோதரர்களான அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயன் ஆகியோர் காவலில் இருந்து வெளியே வரும் வரை இந்த மகிழ்ச்சி முழுமையானதாக இருக்காது. இது கொண்டாட்டத்துக்கான சரியான நேரம் இல்லை. எனது சகோதரர்கள் வெளியே வந்ததும், நாங்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்" என்றார் அனிதா.

ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மதுபான ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதால், அக்கட்சி அரசியல் கொந்தளிப்பை சந்திக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அனிதா, "ஆம் ஆத்மி கட்சியின் அரசியலுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. சஞ்சய் சிங் ஏற்கெனவே வெளியே வந்து விட்டார். எனது சகோதரர்களும் விரைவில் சிறையில் இருந்து நிச்சயம் வெளியே வருவார்கள். அவர்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார். இதனிடையே, சஞ்சய் சிங் வீட்டில் குடும்ப உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற அமர்வு, “இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிடம் இருந்து ஊழல் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனாலும், அவரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்துள்ளீர்கள். அவருக்கு தற்போது காவல் தேவையா இல்லையா என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அவர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில்கூட நீங்கள் அறிந்துகொள்ளலாம்” என்று அமலாக்கத் துறையிடம் கூறியது கவனிக்கத்தக்கது.

பின்னணி: டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம்சாட்டின. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுபானக் கொள்கை முறைகேட்டில் முக்கிய நபராக இவர் செயல்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x