Last Updated : 03 Feb, 2018 04:13 PM

 

Published : 03 Feb 2018 04:13 PM
Last Updated : 03 Feb 2018 04:13 PM

மூக்கு கண்ணாடி வாங்க ரூ.50 ஆயிரம் செலவா?: சர்ச்சையில் சிக்கிய கேரள சபாநாயகர்

 

மூக்கு கண்ணாடி வாங்கிய செலவாக அரசிடம் ஆவணங்கள் தாக்கல் செய்து கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ரூ. 50 ஆயிரம் பெற்றுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ளது.

கடும் நிதிப்பற்றாக்குறையால் இயங்கிவரும் கேரள அரசில் அதன் சபாநாயகரே இப்படி அரசிடம் பணம் பெற்றுள்ளது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருக்கிறது. அங்குள்ள சட்டசபையின் சபாநாயகராக ஸ்ரீராமகிருஷ்ணன் இருந்து வருகிறார்.

அந்த மாநிலத்தில் நேற்று தாக்கல் செய்த 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் கூட, கடும் நிதிக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு சிக்கனம் கடைபிடிக்கப்பட்டது. .

இந்நிலையில், மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனோ மூக்கு கண்ணாடி வாங்க ரூ. 50 ஆயிரம், மருத்துவச் செலவாக ரூ. 4.5 லட்சம் என அரசிடம் ஆவணங்கள் தாக்கல் செய்து பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.பி.பினு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்து இந்த தகவலைப் பெற்றுள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் பினு திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

கேரள மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தனக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்காக ரூ.49ஆயிரத்து 900 செலவு செய்து அரசிடம் பணம் பெற்றுள்ளார். ரூ.4 ஆயிரத்து 900 கண்ணாடியின் பிரேமுக்காகவும், ரூ.45 ஆயிரம் லென்சுக்காகவும் என ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல கடந்த 2016ம் ஆண்டு அக்டோர் 5-ம் தேதி முதல் கடந்த ஜனவரி 19ம் தேதி வரை மருத்துச் செலவாக ரூ. 4.25 லட்சம் செலவு செய்ததாக அரசிடம் ஆவணங்கள் தாக்கல் செய்து பணம் பெற்றுள்ளார். மருத்துவர்கள் அறிவுரையின் பெயரில் இதுபோன்ற கண்ணாடிகளை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராமகிருஷ்ணன் வாங்கிய கண்ணாடியின் உண்மையான பில்கள் அனைத்தும் கேட்டேன் ஆனால், என்னிடம் கொடுக்காமல், அதை சட்டமன்ற செயலாளரிடம் கொடுத்துள்ளார் “ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் கே.கே. சைலஜா என்பவர் ரூ.28 ஆயிரத்துக்கு மூக்கு கண்ணாடி வாங்கியதாக அரசிடம் பணம்பெற்று சர்ச்சையில் சிக்கினார்.

2004ம் ஆண்டு சபாநாயகராக இருந்த வைக்கம் புருஷோத்தம்மன், சட்டசபை உறுப்பினர்கள் மூக்கு கண்ணாடி வாங்கியதாக அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கு மேல் அரசிடம் பணம் பெற முடியாது என கட்டுப்பாடு விதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x