Published : 29 Mar 2024 12:31 PM
Last Updated : 29 Mar 2024 12:31 PM

“பயிற்சி இல்லையெனில், ஏஐ-யை தவறாக பயன்படுத்த வாய்ப்பு”: பில் கேட்ஸ் - மோடி உரையாடல் ஹைலைட்ஸ்

புதுடெல்லி: “முறையான பயிற்சி இல்லாமல் ஒருவருக்கு ஏஐ தொழில்நுட்பம் போன்ற நல்ல விஷயம் கொடுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.” என்று ஏஐ தொடர்பான ஆபத்துகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கூறினார்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் உரிமையாளருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து சில மணிநேரங்கள் உரையாடினார். இந்த உரையாடலின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விதித்துள்ளனர்.

அப்போது ஏஐ தொழில்நுட்பம் குறித்து இருவரும் பேசினர். பிரதமர் மோடி பேசுகையில், “முறையான பயிற்சி இல்லாமல் ஒருவருக்கு ஏஐ தொழில்நுட்பம் போன்ற நல்ல விஷயம் கொடுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஏஐ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்படும் உள்ளடக்கங்களில் வாட்டர்மார்க் இடம்பெற வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில், இந்த தொழில்நுட்பத்தால் யாரும் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் டீப் ஃபேக் போன்ற செயல்களை செய்யலாம். எனவே, ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

அதேநேரம், மனித உற்பத்தித்திறனை மேம்படுத்த ChatGPT போன்ற ஏஐ தொழில்நுப்ட கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். ஏஐ-யை ஒரு மேஜிக் கருவியாக பயன்படுத்த தொடங்கினால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சோம்பேறித்தனம் காரணமாக ஏஐ கருவிகளை பயன்படுத்த நினைத்தால், அது தவறான அணுகுமுறை. ஏஐ உடன் போட்டி போட்டால் அதுவும் நமது திறமையை அதிகரிக்க உதவும்” என்று தெரிவித்தார்.

பில் கேட்ஸ் பேசுகையில், “ஏஐ தொழில்நுட்பத்தின் ஆரம்ப நாட்கள். நாம் நினைக்கும் கடினமான விஷயங்களை செய்யும் ஏஐ, எளிதான விஷயம் ஒன்றைச் செய்யத் தவறிவிடும். ஏஐ தொழில்நுட்பம் பெரிய வாய்ப்பு தான். ஆனால், சில சவால்கள் உள்ளன.” என்று தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது 2023 ஜி20 உச்சி மாநாடு மற்றும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு தனது இந்தி பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் பில் கேட்ஸிடம் பிரதமர் மோடி விளக்கினார். அதேபோல் நமோ செயலியில் ஏஐ பயன்படுத்தப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி முத்து, களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாடு குதிரை பொம்மை ஆகியவற்றை பில் கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x