Published : 29 Mar 2024 11:16 AM
Last Updated : 29 Mar 2024 11:16 AM

‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி - குடும்பத்தின் குற்றச்சாட்டும், விசாரணையும்!

முக்தார் அன்சாரி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் ‘உணவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்’ என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் முக்தார் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவரது குடும்பத்தினர் முன்வைத்தனர். இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையேதான், முக்தார் அன்சாரி சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். முக்தாரின் சகோதரர் அப்சல் அன்சாரி கூறியுள்ள குற்றச்சாட்டில், "சிறையில் தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக முக்தார் கூறினார். இரண்டு முறை இதுபோல் நடந்தது. சுமார் 40 நாட்களுக்கு முன்பும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. மேலும், சமீபத்தில், மார்ச் 19 அன்று, அவருக்கு மீண்டும் விஷம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது" என்று தெரிவித்தார்.

முக்தார் அன்சாரியின் மகன் உமரும், “மார்ச் 19 அன்று தந்தைக்கு இரவு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம்." என்று அதே குற்றச்சாட்டை தெரிவித்தார். முன்னதாக, கடந்த வாரம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த முக்தார் அன்சாரி, "மார்ச் 19 அன்று சிறையில் எனக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் கொடுக்கப்பட்டது. உணவை உட்கொண்ட பிறகு, தனது நரம்புகள் மற்றும் கைகால்களில் வலி ஏற்பட்டது” என்று கூறியதன் தொடர்ச்சியாக தற்போது அவரது குடும்பத்தினரும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

தேஜஸ்வி யாதவ், அசாதுதீன் ஓவைசி ஆகியோர் விஷம் கொடுத்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தும் மாநில அரசு அன்சாரியின் பாதுகாப்பை கண்டுகொள்ளவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், விஷம் கொடுத்ததாக குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். எனினும், முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவினால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் முக்தார் அன்சாரியின் மரணம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பெரிய கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்தார் அன்சாரியின் ஆதிக்கம் மிகுந்த மவூ, காஜிபூர், வாரணாசி மற்றும் ஜான்பூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x