Published : 25 Mar 2024 09:28 AM
Last Updated : 25 Mar 2024 09:28 AM

ஜேஎன்யு பல்கலை., மாணவர் பேரவைத் தேர்தல்: இடதுசாரிக் கூட்டணி அபாரம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இத் தேர்தலில், ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேஎன்யு பல்கலை., மாணவர் பேரவைத் தலைவராக தனஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த, 1996 - 97 ஆம் ஆண்டில் பட்டி லால் பாயிர்வா ஜேஎன்யுவின் முதல் பட்டியலின மாணவர் பேரவைத் தலைவராகி வரலாறு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு பட்டியலினத் தலைவர் மாணவர் பேரவைக்குக் கிட்டியுள்ளார்.

முன்னதாக நேற்றிரவு (ஞாயிறு) 11.30 மணியளவில் தேர்தல் குழு முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் பெரும்பாலான பதவிகளுக்கான இடங்களிலும் இடதுசாரி குழு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு பதவிக்கான போட்டியில் மட்டும் ‘அம்பேத்கர் புலே மாணவர்கள் சங்கத்தின்’ வேட்பாளர் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை.

மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனஞ்சய், “எனக்குக் கிடைத்த ஆதரவை எண்ணி நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு மாணவர்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர், மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகிறது. ஜேஎன்யு வளாகத்தை எவ்வித பாகுபாடும் அற்ற, அனைவரையும் உள்ளடக்கிய வளாகமாக மாற்ற பாடுபடுவேன். மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமைக்காகப் போராடுவேன். அவர்களுக்கு ஏதுவான உள்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்க குரல் கொடுப்பேன். மேலும், கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தனஞ்சய் பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். நாடகம் மற்றும் செயல்திறன் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். தேர்தலில், தனஞ்சய் 2598 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏபிவிபி-யின் உமேஷ் சந்திரா ஆஜ்மீரா 1676 வாக்குகளைப் பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x