Published : 21 Mar 2024 06:38 AM
Last Updated : 21 Mar 2024 06:38 AM

போலி என்கவுன்ட்டர் விவகாரம்: மும்பை முன்னாள் காவல் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

கோப்புப்படம்

மும்பை: மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரபல தாதா சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் வாசி பகுதியில் ராம் நாராயண் குப்தா என்ற லக்கன் பாய்யாவை அவரது நண்பர் அனில் பேடாவுடன் சேர்த்து போலீஸார் கைது செய்தனர். அதேநாள் மாலை புறநகர் வெர்சோவாவில் உள்ள நானி பூங்கா அருகில் குப்தாவை போலி என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறி கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் காவல் துறை அதிகாரி சர்மாவை செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்தது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் இருவர் காவலில் இருந்த போதே இறந்துவிட்டனர்.

குற்றவாளிகளின் தரப்பில் ஆயுள் தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே போன்று, சர்மா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ராம் பிரசாத் குப்தாவின் சகோதரரும் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேவதி மொஹிதே தேரே மற்றும் கவுரி கோட்சே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: செஷன்ஸ் நீதிமன்றம் 2013-ம் ஆண்டு சர்மாவை விடுவித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே அது ரத்து செய்யப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் சர்மாவுக்கு எதிராக கிடைத்த மிகப் பெரிய ஆதாரங்களை பரிசீலிக்க தவறிவிட்டது.

பொதுவான சாட்சியங்கள் சர்மா இந்த வழக்கில் குற்றவாளி என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் செய்கிறது. எனவே, சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்று வாரங்களில் சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும். மேலும், என்கவுன்ட்டரில் சம்பந்தப்பட்ட போலீஸார் உட்பட 13 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x