Last Updated : 20 Mar, 2024 06:55 AM

1  

Published : 20 Mar 2024 06:55 AM
Last Updated : 20 Mar 2024 06:55 AM

பெங்களூருவில் தொழுகை நேரத்தில் ஹனுமன் பஜனை ஒலிக்க செய்ததாக கடைக்காரர் மீது தாக்குதல்

பெங்களூரு: பெங்களூருவில் முஸ்லிம்களின் தொழுகை நேரத்தில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிக்க செய்த கடை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள நகரத்பேட்டையில் முகேஷ் குமார் (40) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ம் தேதி மாலையில் இவரது கடையில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிக்க செய்துள்ளார். அப்போது 5 பேர் அங்கு வந்து, அருகிலுள்ள மசூதியில் ரம்ஜான் நோன்பு தொழுகை நடக்கிறது. அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்வது அவர்களுக்கு தொந்தரவாக உள்ளது. எனவே சத்தத்தை குறைக்குமாறு கோரியுள்ளனர்.

இதற்கு முகேஷ் குமார் மறுப்பு தெரிவித்ததால், அந்த இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து முகேஷ் குமார் ஹல்சூர் கேட் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சுலைமான் (28), ஷானவாஸ் (29), ரோஹித் (25) உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சுலைமான், ஷானவாஸ், ரோஹித் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்து ஒருவர் தன் கடையில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிபரப்பியதற்காக தாக்கப்பட்டுள்ளார். மசூதியில் தொழுகைக்கு தொந்தரவு செய்யக்கூடாது என கூறி அவரை முஸ்லிம்கள் தாக்கியுள்ளனர். காங்கிரஸின் ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

கடந்த சில நாட்களுக்கு கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு இப்போது காங்கிரஸ் அரசு ஜாமீன் வழங்கியுள்ளது. முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆட்சியால் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இந்த பிரச்சினையை பாஜகவினர் அரசியலாக மாற்றி வருகின்றனர். இது இரு மதத்தினர் மத ரீதியாக மோதி கொண்டதால் ஏற்பட்டதல்ல. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இருக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x