Last Updated : 19 Mar, 2024 09:03 PM

 

Published : 19 Mar 2024 09:03 PM
Last Updated : 19 Mar 2024 09:03 PM

மம்தாவின் ‘யார்க்கர்’... ஐபிஎல் புகழ்... யார் இந்த யூசுப் பதான்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

யூசுப் பதான்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக உள்ள நிலையில், அங்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்பியை எதிர்க்க உள்ளார். யூசுப் பதான் அங்கு வெல்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

மம்தா Vs ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இண்டியா' கூட்டணியை உருவாக்கின. இந்தக் கூட்டணிக்கு முக்கிய முகமாக இருந்தவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் - திரிணமூல் கூட்டணி உடைய மம்தா மீதான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கடும் விமர்சனம்தான் முக்கிய காரணமாகும். இதனை மம்தா பானர்ஜியே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

“மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி, அவர் பிரதமர் மோடிக்காக பணியாற்றுகிறார், தைரியம் இருந்தால் பஹரம்பூர் தொகுதியில் என்னை எதிர்த்து மம்தா போட்டியிட வேண்டும்” என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சவால் விட்டதும், அதை மம்தா துணிந்து எதிர்த்து பதிலடி கொடுத்ததும் என மேற்கு வங்க அரசியல் களமே அதிர்ந்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது. இதன்மூலம் ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் ஆல் ரவுண்டரான யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்கு பின்னால் மம்தாவின் அரசியல் ஆடுகளத்தில் ‘யார்க்கர்’ கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதி 1999 முதல் 2019 வரை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வசம் இருக்கும் தொகுதியாகும். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்த சரியான நபர் என யூசுப் பதானை அங்கு களமிறக்கி உள்ளார் மம்தா. காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் ஓட்டு பிரியும். இதன்மூலம் பாஜக ஆதாயமடையும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், மம்தா பானர்ஜி ‘ஐ டோன்ட் கேர், என சொல்லிவிட்டு தனது மாநிலத்தின் மீது கவனம் செலுத்தியுள்ளார். இந்த முறையும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆல் ரவுண்டரான யூசுப் பதான் பற்றி காண்போம்.

யார் இந்த யூசுப் பதான்? - குஜராத்தை பூர்விகமாக கொண்டவர் யூசுப் பதான். சிறுவயதில், யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினர் பரோடாவில் உள்ள ஒற்றை அறை வீட்டில்தான் வசித்து வந்தனர். யூசுப் பதான் மற்றும் அவரது சகோதரர் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். ஆனால் அவருடைய குடும்பத்தை வறுமை வாட்டியது. ஒரு ஷூ வாங்க கூட காசில்லாமல் திண்டாடினார்கள். சந்தைகளில் கிழிந்த ஷூக்களை வாங்கி பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதன் பிறகுதான் யூசுப்பின்னின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. யூசுப் பதான், 2007-ஆம் ஆண்டு முதல் ஐசிசி டி 20 போட்டிகள் மற்றும் 2011 ஐசிசி உலகக் கோப்பையின் உலகளாவிய போட்டிகளில் வென்றார். இந்தியா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்தவர். யூசுப் பதான் 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ரன்களைச் சேர்த்துள்ளார். 2 சதங்கள், 3 அரை சதங்களை அடித்துள்ளார். 22 டி20 போட்டிகளில் விளையாடிய பதான், 236 ரன்கள் சேர்த்துள்ளார், 146 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான பதான், ஒருநாள் போட்டிகளில் 33 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பரோடா ரஞ்சி அணியின் உறுப்பினரான யூசுப், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதானின் மூத்த சகோதரர் ஆவார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் எனும் பெருமையைப் பதானுக்கு உண்டு. ஐபிஎல் தொடரில் இதுவரை 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். 2021ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யூசுப் பதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பிறகு “நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது மேற்கு வங்க மாநில மக்களின் அன்பை வெகுவாக பெற்றேன். இத்தகைய சூழலில் மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எனக்கு வழங்கி உள்ளது. முதல்வர் மம்தாவின் நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பேன். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் என்னை சேர்த்து கொண்டமைக்கு நன்றி. மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் நான் இயங்குவேன். நலிவடைந்த மக்களின் வாழ்வை மேம்படுத்துவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அதனை நான் செய்வதில் உறுதியாக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி Vs யூசுப் பதான்: யூசுப் பதான் போட்டியிடுவது குறித்து சவுத்ரி கூறும்போது, “யூசுப் பதானுக்கு மரியாதையும் அங்கீகாரமும் வழங்க வேண்டும் என்பதுதான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றால் அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருக்கலாம். அல்லது குஜராத் சார்பில் அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க இண்டியா கூட்டணியின் ஆதரவை கேட்டிருக்கலாம்.

பஹராம்பூர் தொகுதியில் அவரை வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாஜக வேட்பாளருக்குதான் ஆதாயம் கிடைக்கும். காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மம்தா இவ்வாறு செய்துள்ளார். இண்டியா கூட்டணி குறித்த மம்தா பானர்ஜியின் பேச்சும் செயல்பாடுகளும் முரண்பாடாக உள்ளது” என்றார்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சந்தோஷ்காலி விவகாரம் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவே தரலாம் எனக் கூறப்படுகிறது. அதை ஈடுகட்டும் வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். சந்தோஷ்காலி விவகாரத்தை மறைக்கவே மம்தா இவ்வாறு அரசியல் நாடகம் நடத்துகிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரராக புகழ்பெற்ற யூசுப் பதான் தற்போது களமிறக்கப்பட்டுள்ளதன் மூலம் இஸ்லாமியர்கள் ஓட்டுகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. யூசுப் பதான் கிரிக்கெட் மூலம் சம்பாதித்த புகழை அரசியல் சாதனையாக மாற்ற முடியுமா என்பதனை காலம் தான் தீர்மானிக்கும்.

> முந்தைய பகுதி: மைசூர் மன்னர் வாரிசை களமிறக்கிய பாஜக... யார் இந்த யதுவீர் வாடியார்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x