Published : 18 Mar 2024 12:13 PM
Last Updated : 18 Mar 2024 12:13 PM

தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிடுக: எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று அந்த உத்தரவில் விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும், குறிப்பாக ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண்ணை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

வெளியிட்ட பின் எந்த தகவலும் விடுபடவில்லை என்பதை பிராமணப் பத்திரமாக எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து தகவல்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.” என்று உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பின்னணி: தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, 2018 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. இதன்படி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டது. இந்த பத்திரங்களை நிறுவனங்கள், தனிநபர்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கினர்.

இத்திட்டத்தை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ரத்து செய்தது. இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ கடந்த 12-ம்தேதி சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இந்த விவரங்களை கடந்த 14-ம் தேதி வெளியிட்டது. அதில், நன்கொடை வழங்கிய நிறுவனங்கள், தனிநபர்களின் பெயருடன் ஒரு பட்டியல், கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்துடன் ஒரு பட்டியல் என 2 பட்டியல்கள் இடம்பெற்றன. எந்த நிறுவனம், யாருக்கு எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களை வரும் 21 ஆம் தேதிக்குள் எஸ்பிஐ முழுமையாக வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x