Published : 16 Mar 2024 12:25 PM
Last Updated : 16 Mar 2024 12:25 PM

மதுபான கொள்கை வழக்கு: முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கவிதா

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீது அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான வரி மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் 10 பேர், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு நேற்று வந்தனர். கவிதா, அவரது கணவர் அனில் உட்பட வீட்டில் இருந்த அனைவரது செல்போன்களையும் கைப்பற்றிய பிறகு, 4 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். பின்னர், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மூலமாக ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி வாரன்ட் வழங்கிய அமலாக்கத் துறையினர் மாலை 6.20 மணி அளவில் அவரை கைது செய்தனர்.

நேற்று இரவு 8.40 மணிவிமானத்தில் கவிதாவை டெல்லிக்கு அழைத்து சென்ற அமலாக்கத் துறையினர், அங்கு உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே. நாக்பால் முன்னிலையில் அவரை இன்று காலை ஆஜர்படுத்தினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, இது ஒரு சட்டவிரோத கைது என குற்றம் சாட்டினார்.

கவிதாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைது உத்தரவில், “சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தை கவிதா இழைத்திருக்கிறார். எனவே, மார்ச் 15, மாலை 5.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதற்கான 14 பக்க விளக்க அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமலக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாரத் ராஷ்ட்ர சமிதியின் மூத்த தலைவரான 45 வயதாகும் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஏறக்குறைய 2 மாதங்கள் கழித்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டில் கவிதாவிடம் அமலாக்கத்துறை 3 முறை விசாரணை நடத்தி அவரது பதில்களை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x