Published : 16 Mar 2024 04:57 AM
Last Updated : 16 Mar 2024 04:57 AM

மக்களவை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. தேர்தல்7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் கடந்த 14-ம் தேதி நியமிக்கப்பட்டனர். இருவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது, மக்களவை தேர்தல் அட்டவணை உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

டெல்லியில் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மக்களவை தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்களவை தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை மார்ச் 16-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும். தேர்தல் ஆணையத்தின் சமூக வலைதளங்களில் இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும்.

நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 97 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல்கள்: மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 3-ம் தேதியும், மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 8-ம் தேதியும் நிறைவடைய உள்ளன. அந்த மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x