Last Updated : 10 Feb, 2018 09:57 AM

 

Published : 10 Feb 2018 09:57 AM
Last Updated : 10 Feb 2018 09:57 AM

ஜம்முவில் ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல்: இருவர் காயம்

ஜம்முவில் சுஜ்வான் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

முதற்கட்ட தகவலின்படி இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்ததாகத் தெரிகிறது.

இன்று காலை 4.30 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. சுஜ்வான் பகுதி ஜம்மு நகரத்திலிருந்து வெறும் 10 கி.மீ தூரத்திலேயே உள்ளது.

இந்த தாக்குதலில் 2 அல்லது 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் குறித்து ராணுவ தரப்பில், "36-வது பிரிகேட் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். அந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. என்கவுன்ட்டர் மேற்கொள்ள வசதியாக கூடுதல் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.

டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் 5-வது நினைவு தினம் முடிந்த மறுதினமே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அப்சல் குரு, நாடாளுமன்ற வளாகத் தாக்குதலில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட தீவிரவாதியாவார்.

ராஜ்நாத் சிங் விசாரணை:

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விவரங்களைக் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை டிஜிபி வைத்திடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். தாக்குதல் தொடர்பான தகவல்களை அனுப்புமாறும் ராஜ்நாத் சிங் தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவத்தை உள்துறை அமைச்சகம் நெருக்கமாக கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்வீட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு என்பதும் உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x