Published : 15 Mar 2024 05:51 PM
Last Updated : 15 Mar 2024 05:51 PM

ஐடி, அமலாக்கத் துறை சோதனைக் காலத்தில் தேர்தல் பத்திரங்கள் வாங்கிக் குவித்த நிறுவனங்கள்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை அளித்த நிறுவனங்கள் பலவற்றின் தன்மையை ஆராயும்போது, அதில் குறிப்பிடத்தக்க ஒரு சில ஒற்றுமைகள் உள்ளது தெரிய வருகிறது. அதாவது, அமலாக்கத் துறை அல்லது வருமான வரித் துறை சோதனைக்கு உள்ளான நிறுவனங்களே இந்த தேர்தல் பத்திரங்களை அதிகளவில் வாங்கிக் குவித்துள்ளதை கவனிக்க முடிகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரித் துறை அல்லது அமலாக்கத் துறையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் பலவும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி கொடுத்துள்ளன. சில நேரங்களில் ஆய்வு நடந்த அடுத்த சில நாட்களிலேயே இந்நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை கொத்துக் கொத்தாக பெருந்தொகைக்கு வாங்கியுள்ளன என்பது புலப்படுகிறது.

அதன்படி ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிகளவில் நன்கொடை அளித்த நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மட்டும் மொத்தம் ரூ.1,368 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனத்தின் உரிமையாளார் சான்டியாகோ மார்ட்டினின் சென்னை வீடு, கோவை அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

மார்ட்டின் லாட்டரி விற்பனை அதிபராக அறியப்படுகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கும் முன்னதாக ஏப்ரல் 2022-ல் அவருக்குச் சொந்தமான ரூ.411 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், லாட்டரி மார்ட்டினின் நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட ரூ.1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில் 75 சதவீதம், அமலாக்கத் துறை சோதனைக்கு முன்பும், 25 சதவீதம் சோதனைக்குப் பின்னரும் வாங்கப்பட்டுள்ளன.

இதே மாதிரியைத் தழுவி (அதாவது ஐடி, அமலாக்கத் துறை சோதனைக்கு முன்னரோ, பின்னரோ) தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களில் கெவன்டர் ஃபுட் பார்க் இன்ஃப்ரா லிமிடெட், எம்கேஜெ என்டர்ப்ரைசஸ் லிமிடட், மதன்லால் லிமிடட் ஆகியன அடங்கும். இந்த மூன்று நிறுவனங்களும் கொல்கத்தாவில் ஒரே முகவரியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று நிறுவனங்களுக்கும் ஒரு பொதுவான இயக்குநர் உள்ளார். அவர் சித்தார்த் குப்தா என்று அறியப்படுகிறார். ஆனால், இந்த மூன்று நிறுவனங்களும் பல்வேறு காலக்கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டவை ஆகும். எம்கேஜெ என்டர்ப்ரைசஸ் லிமிடட் 1982-ம் ஆண்டிலும், மதன்லால் நிறுவனம் 1983-ம் ஆண்டிலும், கெவன்டர் ஃபுட் பார்க் இன்ஃப்ரா லிமிடெட் 2010-ம் ஆண்டிலும் தோற்றுவிக்கப்பட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த 3 நிறுவனங்களும் சேர்ந்து ரூ.573 கோடி வழங்கியுள்ளன. இது தேர்தல் பத்திரங்கள் வாயிலாக வழங்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச நன்கொடையாகும்.

இந்த 573 கோடி ரூபாயில், ரூ.195 கோடிக்கு கெவன்டர் ஃபுட் பார்க் இன்ஃப்ரா லிமிடெட் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இவை ஏப்ரல் - மே காலகட்டத்தில் 3 தொகுதிகளாக வாங்கப்பட்டுள்ளன. மதன்லால் நிறுவனமானது 2019 மே 8 மற்றும் 10 தேதிகளில் ரூ.185 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கெவன்டர் ஃபுட் பார்க் இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனமும் மதன்லால், எம்கேஜே நிறுவனங்களும் ஒரே மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்கின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கெவன்டர் அக்ரோ நிறுவனம் மீது ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். மேற்கு வங்க அரசு மெட்ரோ டெய்ரியின் பங்குகளை 2017-ல் கெவன்டர் அக்ரோவுக்கு விற்றதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மெட்ரோ டெய்ரியின் 47 சதவீத பங்குகள் கெவன்டர் அக்ரோவிடம் விற்கப்பட்டதால் அப்போது அந்நிறுவனம் சர்ச்சைக்குள்ளானது.

அதே 2017-ஆம் ஆண்டு சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட தனியார் ஈகுவிட்டி முதலீட்டு நிறுவனம் கெவன்டர் அக்ரோவிடம் இருந்து 15 சதவீத பங்குகளை வாங்கியது. ரூ.170 கோடிக்கு அந்தப் பங்குகள் கைமாறின. இப்போது கெவன்டர் அக்ரோவின் நிர்வாக மேலாளராக மாயங் ஜலான் இருக்கிறார். அவர் மெட்ரோ டெய்ரியின் இயக்குநரும் கூட.

இந்நிலையில்தான் 2019-ல் மேற்கு வங்க அரசு மெட்ரோ டெய்ரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்றது தொடர்பாக விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கியது. மாநில அரசு உயர் அதிகாரிகள் பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த விசாரணையின் நீட்சியாக 2021-ல் கொல்கத்தாவில் உள்ள கெவன்டர் அக்ரோ லிமிடட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

ஆனால், 2022-ல் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பொது நல வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றமும் கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அதன்பின்னர் அமலாக்கத் துறை விசாரணை நீர்த்துப் போனது.

இது இப்படியிருக்க, ஹைதராபாத்தின் யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை குழுமம் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் வருமான வரித் துறை சோதனைக்கு உள்ளானது. இந்த நிறுவனமானது 2021 அக்டோபர் தொடங்கி 2023 அக்டோபர் வரை ரூ.162 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

அரபிந்தோ ஃபார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் ரெட்டி 2022ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபான கொள்கையில் தொடர்புடையதாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து 5-வது நாள் அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவருடைய நிறுவனம் ரூ.5 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது. 2023 நவம்பரில் அதே நிறுவனம் ரூ.25 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.

இவ்வாறாக அந்த நிறுவனம் மட்டும் மொத்தமாக ரூ,52 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. 2021 அக்டோபர் தொடங்கி 2023 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த தேர்தல் பத்திரங்களை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. ரூ.30 கோடி மதிப்பிலான பத்திரங்கள் ரெட்டியின் கைதுக்குப் பின்னால் வாங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

2023 டிசம்பர் 18-ல் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. ஒரே நேரத்தில் அந்நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகம், உயர் அதிகாரிகளின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. அந்த நிறுவனம் 2024 ஜனவரி 11-ல் ரூ.40 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

அதேபோல் ரியல் எஸ்டேட் நிறுவனமான கல்பதரு ப்ராஜக்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்களின் இல்லங்களில் 2023 ஆகஸ்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. ஏப்ரல் 2023 முதல் அக்டோபர் 2023 வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவனம் ரூ.25.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. | வாசிக்க >
டாப் நிறுவனங்கள், கட்சிகள் எவை? - தேர்தல் பத்திர தரவுகளும் நிதிப் பட்டியலும்

- விக்னேஷ் ராதாகிருஷ்ணன், ஸ்ரீநிவாசன் ரமணி | ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x