

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களில் கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ‘லாட்டரி’ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் வகிக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 204 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒருநாள் முன்னதாகவே, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டு கோப்புகளில், முதல் கோப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், தொகை விவரம் அடங்கியுள்ளன. இரண்டாவது கோப்பில் தேர்தல் பத்திரங்களை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளன. இதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தரவுகள் மூலம் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்குனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது. இதற்கடுத்தபடியாக ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. டாப் 10 நிறுவனங்கள்:
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளில் மொத்தமாக 22 நிறுவனங்கள் தலா ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்கவையாக, டிஎல்எப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ் லிமிடெட் ரூ.130 கோடி, ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ரூ.123 கோடி, சென்னை கிரீன் வூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.105 கோடி, டோரன்ட் பவர் லிமிடெட் ரூ.106.50 கோடி ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இவை தவிர, ராம்கோ சிமென்ட்ஸ் ரூ.54 கோடி, முகேஷ் அம்பானியின் சம்பந்தி அஜய் பிரமலுக்கு சொந்தமான பிரமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ.35 கோடி, மஹிந்திரா குழுமம் ரூ.25 கோடி, ஹீரோ மோட்டோகார்ப் ரூ.20 கோடி, பஜாஜ் பைனான்ஸ் ரூ.20 கோடி ஆகிய நிறுவனங்கள் நன்கொடை வழங்கியுள்ளன.
மொத்தத்தில் ஏப்ரல் 12, 2019 முதல் ஜனவரி 24, 2024 வரையிலான காலகட்டத்தில் 12,155 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களால் வாங்கப்பட்டுள்ளன.
கட்சிகளின் டாப்: அதேநேரம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அதிகம் பெற்ற அரசியல் கட்சிகளில் பாஜக ரூ.6060.5 கோடி பெற்று முதலிடத்தில் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த நன்கொடையில் மொத்தம் 47.46 சதவீதம் பாஜகவுக்கே கிடைத்துள்ளன. பாஜகவுக்கு அடுத்தபடியாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சி ரூ.1,609.50 கோடி (12.6%) பெற்றுள்ளது. கட்சிகளின் விவரம்: