Last Updated : 17 Feb, 2018 07:54 AM

 

Published : 17 Feb 2018 07:54 AM
Last Updated : 17 Feb 2018 07:54 AM

நிலவின் தென் துருவப் பகுதியில் ஆராய ஏப்ரலில் சந்திராயன்-2 செலுத்தப்படும்: மத்திய விண்வெளித் துறை அமைச்சர் தகவல்

வரும் ஏப்ரல் மாதம் சந்திராயன்-2 விண்ணில் தனது பயணத்தைத் தொடங்கும் என்று மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் சந்திராயன்-1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) 2008-ல் வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. இதைத் தொடர்ந்து சந்திராயன்-2 திட்டத்தை இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில் நேற்று சந்திராயன்-2 திட்டப் பணிகளை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, “சந்திராயன்-2 விண்கலமானது வரும் ஏப்ரல் மாதம் செலுத்தப்படவுள்ளது. சந்திராயன்-1 விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருப்பதை அறிந்தோம். இப்போது சந்திராயன்-2 பயணத்தைத் தொடங்கவுள்ளோம். இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில், சந்திராயனில் செல்லும் ரோவர் வாகனம் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்தில் விண்கலத்தை அனுப்பி இறக்கும் இஸ்ரோவின் முதல் திட்டம் இது” என்றார்.

இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:

ரூ.800 கோடி செலவில் சந்திராயன்-2 திட்டம் தயாராகியுள்ளது. ரோவர் வாகனம் மூலம் நிலவு குறித்த அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும். ஒரு வேளை ஏப்ரலில் விண்கலத்தை செலுத்த முடியாமல் போனால் அது நவம்பரில் விண்ணில் செலுத்தப்பட்டுவிடும்.

நிலவின் தென் துருவப் பகுதியில் ரோவர் வாகனத்தை இயக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்தப் பகுதி நிலவின் தந்திரங்கள் நிறைந்த இடமாகும். எனவே தென் துருவப் பகுதியைத் தேர்வு செய்தோம். அங்கு பழமையான பாறைகள் உள்ளன. இதன்மூலம் அந்த கிரகத்தின் மூலத்தை நாம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும். மற்ற நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியபோது நிலவின் தென் துருவப் பகுதிகளுக்கு அவை செல்லவில்லை. எனவேதான் அந்தப் பகுதியைத் தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு கே.சிவன் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x