Published : 18 Feb 2018 02:40 AM
Last Updated : 18 Feb 2018 02:40 AM

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: பிஹாரில் 1,000 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்

பிஹாரில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட சுமார் 1,000 மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கப்பட்டனர்.

பிஹாரில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்துவந்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இந்நிலையில் பிஹார் பள்ளி தேர்வு வாரியத் தலைவர் ஆனந்த் கிஷோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநிலம் முழுவதும் 1,384 மையங்களில் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இந்த ஆண்டு எந்தவித முறைகேட்டுக்கும் இடமளிக்காததால் தேர்வு நியாயமான முறையில் நடந்தது. தேர்வில் முறைகேடு என்பது கடந்த காலத்துடன் முடிந்து விட்டது. தற்போது அதற்கு இடமில்லை.

மாநிலம் முழுவதும் தேர்வில் காப்பியடித்தல், துண்டுச்சீட்டு வைத்து எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட சுமார் 1,000 மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கப்பட்டனர். 25 போலி தேர்வு அலுவலர்களும் பிடிபட்டனர். தேர்வில் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிய பெற்றோர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பிஹாரில் தேர்வு முறைகேடு பெருமளவில் நடப்பதாக பல ஆண்டுகளாக செய்தி வெளியாகிறது. கடந்த ஆண்டு கலைப் பாடப் பிரிவில் 42 வயது நபர் முதலிடம் பெற்றதாக வெளியான செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில், பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக அவர் தனது உண்மையான வயதை மறைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x