Published : 29 Feb 2024 06:48 AM
Last Updated : 29 Feb 2024 06:48 AM

நாடு முழுவதும் அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள பெருநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் சிகிச்சைக்கான நிலையான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும், இல்லையென்றால் நாங்கள் அமல்படுத்துவோம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவமனைகளுக்கான மத்திய அரசு விதிமுறைகள் 2012- 9-வது பிரிவின் கீழ் சிகிச்சைகளுக்கு நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மைக்கான வீரர்கள் அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.

இந்த விதிமுறைகள்படி அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளுக்கான கட்டணத்தை, நோயாளிக்கும் தெரியும் வகையில் வெளியிட வேண்டும். ஆனால் எந்த மருத்துவமனையும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

தங்கள் இஷ்டத்துக்கு நோயாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றன. கரோனா பரவல் காலத்தில் அதற்கான சிகிச்சைக்கு மத்திய அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. மற்ற சிகிச்சைகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதில் மாநிலங்கள் ஒத்துழைக்க வில்லை என்றால், மத்திய சட்டங்களின் கீழ் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என மனுதாரர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

கண்புரை அறுவை சிகிச்சை: கண்புரை அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.10,000 செலவாகிறது, தனியார் மருத்துவமனைகளில் ரூ.30,000 முதல் ரூ.1,40,000 வரை செலவாகிறது. இந்த வித்தியாசம் கண்டனத்துக்குரியது. மருத்துவமனைகளுக்கான மத்திய அரசின் விதிமுறைகள் சட்டம் கொண்டு வரப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதை மத்திய அரசால் இன்னும் அமல்படுத்த முடியவில்லை. பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் சிகிச்சைகளுக்கான நிலையான கட்டணத்தை மாநிலங்களுடன் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஒரு மாதம் கெடு: மத்திய, மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி சிகிச்சைகளுக்கான நிலையான கட்டணம் வெளியிடுவதை உறுதி செய்ய ஒரு மாதத்துக்குள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தவறினால், மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிலையான கட்டணங்களை அமல்படுத்தவது பற்றி நாங்கள் பரிசீலிப்போம். ஒரே மாதிரியான கட்டணங்களை மாநில அரசுகள் நிர்ணயிக்கவில்லை என்றால், மத்திய சட்டங்களை பயன்படுத்துங்கள். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x