Published : 06 Feb 2018 08:16 AM
Last Updated : 06 Feb 2018 08:16 AM

மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அரசியல் சாசனத்தில் 5 திருத்தங்களை செய்ய வலியுறுத்தியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசு கருத்து கேட்டிருந்தது. மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தனது கருத்துக்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரம் அரசியல் சாசனத்தில் 5 சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதன்படி, மக்களவை தேர்தலுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வசதியாக மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை கூட்டுவதற்கு அல்லது குறைப்பதற்கு அரசியல் சாசனத்தின் 83-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மக்களவையை குடியரசுத் தலைவர் கலைப்பது தொடர்பான சட்டப் பிரிவு 85, மாநில சட்டப் பேரவைகளின் பதவிக் காலம் தொடர்பான சட்டப் பிரிவு 172, சட்டப் பேரவைகளை கலைப்பது தொடர்பான சட்டப் பிரிவுகள் 174 மற்றும் 356 ஆகிய 5 சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.2,000 கோடி தேவைப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x