Published : 25 Feb 2024 05:10 PM
Last Updated : 25 Feb 2024 05:10 PM

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பு

லக்னோ: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். முன்னதாக, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் மட்டுமே ராகுலின் யாத்திரையில் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். அண்மையில் காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஆக்ராவில் நடந்த யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்றார்.

அந்த யாத்திரையில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், “வரும் நாட்களில் நம் முன் இருக்கப்போகும் மிகப்பெரிய சவால் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதே ஆகும். அம்பேத்கரின் கனவை நினைவாக்க நாம் இதனைச் செய்ய வேண்டும். பாஜகவை ஒழிப்போம். தேசத்தைப் பாதுகாப்போம்” என்றார்.

இழுபறிக்குப் பின்.. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 2023 ஜூலையில் இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம்கட்சிகள் அண்மையில் விலகின. இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்கத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வி அடைந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் தனித்துப் போட்டியிடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள் காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளன. இந்த சூழலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாதி, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வந்தது.

முதலில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை சமாஜ்வாதி ஒதுக்கியது. இதன்பிறகு 17 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு குறைவு என்பதால் காங்கிரஸ் கடும் ஆட்சேபத்தை பதிவு செய்தது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கி ரஸ் கூட்டணி உடையும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் நேரடியாக தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது காங்கிரஸ் கோரிய சில தொகுதிகளை வழங்க அகிலேஷ் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x