Published : 24 Feb 2024 07:40 AM
Last Updated : 24 Feb 2024 07:40 AM

ரெய்டு நடத்தி 30 நிறுவனங்களிடம் மிரட்டி பணம் பறித்த பாஜக: காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ரெய்டு நடத்தி மிரட்டல் விடுக் கப்பட்டதன் அடிப்படையில் 30 நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பாஜக நன்கொடையை பெற்றதாக காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநரகம் (ஈடி), வருமான வரி துறையை மத்திய அரசு தவறாக வழிநடத்தி வருகிறது. இதுபோன்ற முகமைகளை தவறாக பயன்படுத்தி 30 நிறுவனங்களிடம் சோதனை நடத்தி மிரட்டி நன்கொடை என்றபெயரில் பாஜக வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இந்த 30 நிறுவனங்கள் 2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில் பாஜகவுக்கு மொத்தம்ரூ.335 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளன. இந்தக் காலக் கட்டத்தில் அந்த 30 நிறுவனங்களும் மத்திய முகமைகளின் சோதனைநடவடிக்கைகளை எதிர்கொண்டிருந்தன.

அதிலும் குறிப்பாக, 23 நிறுவனங்கள் பாஜகவுக்கு மொத்தம் ரூ.187.58 கோடியை நன்கொடை அளித்துள்ளன. ஆனால், 2014 முதல் சோதனை நடந்த ஆண்டு வரை இந்த23 நிறுவனங்கள் பாஜகவுக்கு எந்ததொகையையும் நன்கொடையாக அளிக்கவில்லை. அப்படியிருக்கையில், சோதனை யில் சிக்கிய பிறகு அந்த நிறுவ னங்கள் பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கியுள்ளன. ஆனால், அதன்பிறகு இந்த வணிக நிறுவ னங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த தகவலும் இல்லை. அது கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. மத்திய முகமைகளின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

எனவே, நிறுவனங்கள் மீதான ஈடிவழக்குகள், அவை பாஜகவுக்கு அளித்த நன்கொடை விவரங்கள்குறித்து மத்திய நிதியமைச்சகம் முழுமையான விசாரணை நடத்தவேண்டும். இந்த நிகழ்வுகளிலிருந்து நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள சுயாதீனமான மத்திய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன.

பாஜக பெற்ற நன்கொடைகள் குறித்து நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?. உண்மையான விளக்கத்தை தர நீங்கள் விரும்பவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணையை எதிர்கொள்ள தயாரா? இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு, வருமான வரித் துறை மற்றும்பிற விசாரணை அமைப்புகளை இதுபோன்ற நிறுவனங்களுக்கு பின் நிறுத்தி பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடையை அளிக்க வற்புறுத்தியுள்ளன. இது, கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, நாங்கள் கேள்விஎழுப்புவதை நிறுத்தப் போவதில்லை. ஈடி. மற்றும் சிபிஐவிசாரிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x