Last Updated : 14 Feb, 2018 08:06 AM

 

Published : 14 Feb 2018 08:06 AM
Last Updated : 14 Feb 2018 08:06 AM

பெரும்பான்மையைத் தக்க வைக்கப் போராடுகிறார் மோடி

மோ

டியின் உடல் மொழியை வைத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று கண்டுபிடிக்க முயல்வது நிச்சயம் தோல்வியில்தான் முடியும்; இரண்டு வரிகளுக்கு இடையில் அல்லது இரண்டு சைகைகளுக்கு இடையில் அவர் சொல்லாமல் விடுவதும், காட்டாமல் விடுவதும் என்னவென்று உணர்வது வெகு கடினம். சமீபகாலமாக அவர் பேசும் பேச்சுகள் 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது பேசிய பிரச்சாரங்களை மீண்டும் தொடங்கிவிட்டார் என்பதையே உணர்த்துகின்றன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் அவர் நிகழ்த்திய இரு உரைகளுமே ஒரு வித எச்சரிக்கைகளே. அவருடைய 'மிகப் பெரிய கவலையே காங்கிரஸ்தான்' என்பது தெளிவாகப் புரிகிறது. மோடியின் மக்களவைப் பேச்சின்போது, நேரு மற்றும் அவருடைய குடும்பத்தவர்களின் பாவங்கள் வரிசையாகப் பட்டியலிடப்பட்டன. காஷ்மீரை ஆக்கிரமிக்கவிட்ட நேரு, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்த இந்திரா, 1984-ல் சீக்கியர்களைப் படுகொலை செய்ய அனுமதித்த ராஜீவ், ஆந்திர மாநிலப் பிரிவினையை அரசியல் ஆதாயம் கருதி அவசரமாகப் பிரித்த சோனியா, மன்மோகன் சிங் அரசு தயாரித்த அவசரச் சட்டத்தை சுக்குநூறாகக் கிழித்துப் போட்ட ராகுல் காந்தி என்று வரிசையாக குற்றம்சாட்டினார்.

இனி நடைபெறவுள்ள அனைத்து சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் (திரிபுராவைத் தவிர) பாஜகவுக்குப் பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். கர்நாடகாவிலும் மேகாலயத்திலும் காங்கிரஸ் ஆள்கிறது. மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறது. 2018-ல் நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள்தான் 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கப் போகின்றன. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டால் அதற்குப் பிறகு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் மோதிப் பார்க்க முடியும். இம்மூன்றில் இரண்டு மாநிலங்களை காங்கிரஸ் வென்றுவிட்டால் 2019-ல் 'காங்கிரஸ்தான் வெல்லும்' என்று பந்தயம் கூட கட்ட முடியும். கர்நாடகாவில் பாஜக வென்றுவிட்டால் குஜராத், மத்திய பிரதேச இடைத் தேர்தல்களால் ஏற்பட்ட பதற்றங்கள் பறந்துவிடும்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் மோடி-ஷா நினைத்தபடிதான் எல்லாம் நடந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. நூலிழையில் குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், ராஜஸ்தான் இடைத் தேர்தலில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் மூன்று தொகுதிகளில் தோற்றிருப்பதும் அதற்கு சாட்சி. கடந்த ஆறு மாத காலங்களாகத்தான் ராகுல் காந்தி கவனச் சிதறல் ஏதும் இல்லாமல் அரசியலில் தீவிரம் காட்டியிருக்கிறார். மோடி-ஷா இரட்டையர் வெறும் பிரச்சாரகர்கள் மட்டுமல்ல, தேர்தல் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள்! 2014-ல் 44 இடங்களில் வென்ற கட்சிதானே காங்கிரஸ் என்று அலட்சியமாக இருக்கமாட்டார்கள். தங்கள் கட்சிக்கு அப்போது 17 கோடி வாக்குகள் கிடைத்தபோது காங்கிரஸ் 11 கோடியைப் பெற்றதை அவர்கள் மறக்கமாட்டார்கள். இந்த 11 கோடி மேலும் சில கூடி 13 கோடியாக உயர்ந்தால்கூட எத்தனை தொகுதிகள் கைமாறும் என்பது அவர்கள் உணர்ந்ததே.

1984-ல் திட்டவட்டமான தேர்தல் முடிவுகள் கிடைத்த பிறகு அதன் பின்னர் வந்த முடிவுகள் அனைத்தும் ‘9 செட்களைக் கொண்ட டென்னிஸ் போட்டிகளையே' எனக்கு நினைவுபடுத்தின. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம் (இப்போது தெலங்கானாவுடன் சேர்ந்து), மத்திய பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை அந்த 9 செட் மாநிலங்கள். இந்த 9 மாநிலங்களில் 5 மாநிலங்களில் அதிக இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணிதான் அரசு அமைக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு வாதிட்டிருக்கிறேன். இந்த 9 மாநிலங்களில் மொத்தம் 351 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணிக்கு 200-க்கும் மேல் கிடைக்கும். இந்த 200 தொகுதிகள் பல சிறிய கட்சிகளை ஈர்த்து 272 ஆக மலர்வதற்கு வாய்ப்பு உண்டு. 2014-ல் பாஜகவுக்கு மட்டும் கிடைத்தது 282.

இது எப்படிக் கிடைத்தது என்று பார்த்தால், இப்போது மோடி-ஷா இரட்டையரின் கவலை ஏன் என்று உங்களுக்குப் புரியும். ராஜஸ்தான் 25, மத்திய பிரதேசம் 27, மகாராஷ்டிரம் 42, உத்தர பிரதேசம் 73, பிஹார் 31, குஜராத் 26 , உத்தராகண்ட் 5, இமாசலம் 4 , ஜார்க்கண்ட் 12, சத்தீஸ்கர், ஹரியாணா 7. பாஜகவுக்குக் கிடைத்த 282-ல் பெரும்பான்மையானவை இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தும் மேற்கு மாநிலங்களிலிருந்தும் கிடைத்தவை. தென் மாநிலங்களும் கிழக்கு மாநிலங்களும் ஆதரிக்கவில்லை. 2014-ல் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி 1977-ல் ஜனதாவுக்குக் கிடைத்த வெற்றியைப் போலத்தான்.

2014-ல் கிடைத்ததைப் போன்ற வெற்றி மீண்டும் கிடைக்காது என்பது பாஜகவுக்கே நன்கு தெரியும். குஜராத்திலேயே இழப்புகள் ஏற்படும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் இடங்கள் இழப்பு நிச்சயம். வட கிழக்கு மாநிலங்களில்பாஜகவுக்கு முன்பைப்போல அதிக இடங்கள் கிடைக்காது.

எனவேதான் பாஜகவுக்குப் பெரும்பான்மை வலு இல்லாமல் அதே சமயம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறு குறித்து விவாதிக்கிறோம்.'இந்தியா டுடே' நடத்திய கருத்துக் கணிப்பு, காங்கிரஸுக்கு அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்னால் பாஜகவுக்கே அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது - ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று கூறினால் கற்பனை என்று கூறியிருப்பார்கள். பெரும்பான்மை இல்லாவிட்டாலும் மோடி இப்போதிருப்பதைப்போல அதிகாரம் செலுத்துபவராகத்தான் இருப்பார். குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராகவும் டெல்லியில் ஐந்து ஆண்டுகள் பிரதமராகவும் இருந்த பிறகு, மற்றவர்கள் கொடுத்து அதிகாரத்தைப் பெறுபவராக இருக்க சம்மதிக்க மாட்டார். எனவேதான் 2019 தேர்தலுக்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்கிவிட்டார்.

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x