Published : 26 Feb 2018 03:41 PM
Last Updated : 26 Feb 2018 03:41 PM

ஜம்மு காஷ்மீர் அரசு பணிக்கான தேர்வில் பாகிஸ்தான் பயன்படுத்தும் வார்த்தை: கேள்வியால் எழுந்த சர்ச்சை

ஜம்மு காஷ்மீர் மாநில அரசுப்பணிக்கான தேர்வில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்த கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு பணிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேர்வு எழுதினர். அந்த தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தற்போது சர்ச்சையாகி, தேர்வை செல்லாது என அறிவிக்க கோரிக்கை வலுத்துள்ளது.

அந்த தேர்வில் கேட்கப்பட்ட 86-வது கேள்வியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் காஷ்மீரின் ஒரு பகுதியை சுதந்திரமான காஷ்மீர் அல்லது இந்தியாவின் அதிகாரத்துக்குள் வராத காஷ்மீர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், சுதந்திரமான காஷ்மீர்(ஆசாத் காஷ்மீர்) என்ற வார்த்தையை மத்திய அரசு ஒருபோதும் பயன்படுத்தாது. தற்போதுவரை அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஆசாத் காஷ்மீர் என்ற வார்த்தையை பாகிஸ்தான் மட்டுமே பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசு பயன்படுத்தும் வார்த்தையை, காஷ்மீர் அரசு தேர்வில் பயன்படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கேள்வியில் ஜம்மு மற்றும் காஷ்மீரி்ன் சர்வதேச எல்லைப்பகுதியின் வடக்கு மற்றும் கிழக்கில் சீன எல்லை இருக்கிறது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் சுதந்திர காஷ்மீரை எந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பிரிக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் என்று இருந்திருக்க வேண்டும், அதற்கு பதிலாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் சுதந்திரமான காஷ்மீர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த கேள்விக்கு ஜம்மு பகுதியில் தேர்வு எழுதிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்தத் தேர்வை ரத்து செய்யக் கோரியுள்ளனர். ஆனால், தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அரசு தேர்வாணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தேர்வாணயத்தின் தலைவர் சிம்ரன்தீப் சிங் கூறுகையில் “ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தவறாக இருந்தால், அது திருத்திக்கொள்ளப்படும். எந்தவிதமான கேள்வியும் சர்ச்சைக்குரிய வகையில் இல்லை எனக் கேள்வித்தாளை தயாரித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x