Last Updated : 12 Feb, 2018 03:51 PM

 

Published : 12 Feb 2018 03:51 PM
Last Updated : 12 Feb 2018 03:51 PM

மனிதச் சாம்பலிலிருந்து கலை நிர்மாணம்: உடலுறுப்புத் தானத்தை வலியுறுத்தும் நூதன விழிப்புணர்வுப் பிரச்சாரம்

 

மனிதர்கள் இறந்த பின் மண்ணில் மக்கப்போகும் உடல் உறுப்புகளை பிறருக்குத் தானமாக வழங்கினால், அவர்களின் நினைவுகள் என்றென்றும் உலகில் வாழும் என்பதை உணர்த்தும் வகையில் உடல் உறுப்பு தானம் பயணம் தொடங்கப்பட்டுள்ளது

இது சாதாரண பயணம் அல்ல. உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துவிட்ட ஒரு முதியவரின் உடலை எரித்தபின் அவரின் உடல் சாம்பலும், களிமண்ணும் சேர்த்து, அதன் மூலம் மாதிரி உடல் உறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு மருத்துவமனைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதைப் பார்க்கும் மக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு உண்டாக வேண்டும், தாமாக முன்வந்து உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த முதியவரின் உடல் சாம்பலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகள் களிமண் கலந்து செய்யப்பட்டன. இப்போது, இந்த சாம்பல்-களிமண் உறுப்புகள் அனைத்தும் மும்பையில் உள்ள பரேல்ஸ் குளோபல் மருத்துவமனையில் மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த களிமண் உறுப்புகள் சென்னை, டெல்லி, லண்டன் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட உள்ளது.

இது குறித்து மோகன் அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பின் மேலாளர் ஜெயா ஜெய்ராம் கூறுகையில், “ மக்களின் இதயத்தை தொடும் வகையில் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்ல நினைத்தோம். அப்போதுதான் உடல் உறுப்பு தானத்தை இதுபோன்ற புதிய வகையில், உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடல் சாம்பலில் இருந்து சொல்லலாம் என முடிவு செய்தோம்” எனத் தெரிவித்தார்.

இந்த மாதிரி உடல் உறுப்புகளை உருவாக்கிய சிற்பக்கலைஞர் ராஜேஷ் சாவந்த் கூறுகையில், “ என்னிடம் உடல் உறுப்பு தானத்தை கூறி உடல் உறுப்புகளை செய்யக் கூறினார்கள். உண்மையான மனிதனின் உடல் சாம்பலில் இருந்து உடல் உறுப்புகளை உருவாக்கும் போதுதான் அதன் வலியை, மகத்துவத்தை அறிந்து கொண்டேன். இதைப் பார்க்கும் மக்களின் மனதில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற கலைப் பொருட்கள் உருவாக்கத்தில், திட்டத்தில் நான் இதற்கு முன் ஈடுபட்டதில்லை. நிச்சயம் மக்களுக்கு வலிமையான செய்தியை சொல்லும்” எனத் தெரிவித்தார்.

“சாம்பலுக்கு முன்னால் நமது வாழ்க்கை” என்ற தலைப்பில் இந்த மாதிரி உடல் உறுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உடல் உறுப்புகள் சொல்லும் செய்தி மிக எளிமையானதுதான். சாம்பலாகப் போகும் உடல் உறுப்புகளை, மரணத்தின் பிடியில் இருக்கும் மக்களுக்கு கொடுத்து புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டுகள் என்பது மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x