Published : 20 Feb 2024 11:12 AM
Last Updated : 20 Feb 2024 11:12 AM

சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம்: ஆவணங்களை இன்று ஆய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்

அனில் மசிஹ்

புதுடெல்லி: குதிரை பேரம், பாஜக வேட்பாளரின் சர்ச்சைக்குரிய வெற்றி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குப்பதிவு ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்கிறது. அதேபோல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்களுக்கு இதுகுறித்த ஆவணங்களை இன்று சமர்ப்பிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. அதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்ந்து பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடையும் கோரியது ஆம் ஆத்மி. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது. தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது.

சண்டிகர் நிர்வாகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். சண்டிகர் மேயர் தேர்தலை முன்னின்று நடத்திய தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் ஆஜரானார். விசாரணையின் போது ‘சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்து கொண்டிருப்பது மிக தீவிரமான விஷயம். சண்டிகர் மாநகராட்சியில் புதிதாக தேர்தல் நடத்துவதற்கு பதிலாக. அரசியல் சார்பற்ற புதிய தேர்தல் அதிகாரியை நியமித்து வாக்குகளை எண்ணலாம். ஆனால், வாக்குச் சீட்டுகளை ஆராய்ந்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும். தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளை 20-ம் தேதி நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தது. \

தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இதற்கிடையே, கடந்த 18-ம் தேதி இரவு பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x