Published : 18 Feb 2024 05:24 PM
Last Updated : 18 Feb 2024 05:24 PM

வயநாட்டில் ராகுல் காந்தி | ‘சொந்த தொகுதியின் சுற்றுலா பயணி’ என பாஜக விமர்சனம்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி

புதுடெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி இறந்தவர்களின் வீடுகளுக்கு அத்தொகுதி எம்.பி. ராகுல் காந்தி சென்ற நிலையில் அவரை ‘சொந்த தொகுதியின் சுற்றுலா பயணி’ என பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான முரளிதரன் கூறுகையில், “ராகுல் காந்தி அவரது சொந்தத் தொகுதியின் சுற்றுலா பயணி. அவர் அங்கு 5- 6 மாதத்துக்கு ஒரு முறைதான் செல்வார். ஒரு வாரத்துக்கும் மேலாக மனித - விலங்கு மோதல்களை சந்தித்து வரும் தொகுதியின் பிரச்சினைகளை அவர் கவனிக்க வேண்டும். அதற்கு ராகுல் காந்திக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. யானை தாக்கி வனக்காவலர் இறந்ததற்கு அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்காததே காரணம். இதுபோல தாக்குதலுக்கு உள்ளாகும் நபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வயநாட்டில் இல்லை. ராகுல் காந்தி தனது சொந்தத் தொகுதியை கண்காணித்து அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வயநாட்டில் காட்டு யானை தாக்கி பொதுமக்கள் உயிரிழந்ததைக் கண்டித்து போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து, வாரணாசியில் நடந்துவந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை திடீரனெ நிறுத்தி விட்டு ராகுல் காந்தி வயநாடு புறப்பட்டார். இன்று அவர் வயநாடு மாவட்டம் மனந்தவாடியில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானையினால் கொல்லப்பட்ட அஜி என்பவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு 20 நிமிடம் செலவளித்தார். அதனைத் தொடர்ந்து, கருவா தீவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த வனத்துறையின் சூழல் நட்புச் சுற்றுலா வழிகாட்டியான பால் வீட்டுக்கும் சென்றார்.

இந்தத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, வயநாடு பகுதியில் நிலவி வரும் மனித - விலங்கு மோதல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கோரி அங்கு நேற்று மாவட்ட அளவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் கடைகளும் வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

ஆளும் எல்டிஎஃப், எதிர்க்கட்சியான யுடிஎஃப் மற்றும் பாஜகவால் நடத்தப்பட்ட இந்த கடையடைப்பு போராட்டம் புல்பாலியில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் வனத்துறையின் வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும் முந்தைய நாள் புலி தாக்கி கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பசுவை அந்த வாகனத்தின் மேல் கட்டிவைத்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x