Published : 17 Feb 2024 05:11 PM
Last Updated : 17 Feb 2024 05:11 PM

பாஜகவில் இணைகின்றனரா கமல்நாத், மகன் நகுல்நாத்? - ‘எக்ஸ்’ பயோ விவரத்தால் சலசலப்பு

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் தனது சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரத் தகவலில் இருந்து ‘காங்கிரஸ் கட்சி’ என்ற அரசியல் அடையாளத்தை நீக்கியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. அவர் தனது தந்தையுடன் பாஜகவில் இணையலாம் என்ற சலசலப்புகள் எழுந்துள்ளன.

இது குறித்து கமல்நாத் கூறுகையில், “எதற்காக நீங்கள் அனைவரும் பரபரப்பாகிறீர்கள். இதை மறுப்பது விஷயமல்ல. அப்படி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயமாக தகவல் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார். கமல்நாத்தின் இந்தக் கருத்து சூசகமாக இருப்பதாலும், சிந்த்வாராவுக்குச் செல்வதாக இருந்த கமல்நாத், நகுல்நாத் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாலும் பரபரப்பு மேலும் பலமடங்கு கூடியுள்ளது.

கமல்நாத்தும், மகள் நகுல்நாத்தும் டெல்லியில் பாஜக முக்கியத் தலைவர்களை சந்திப்பார்கள் எனத் தெரிகிறது. வட இந்திய ஊடகங்கள் சில கமல்நாத்துடன் 10 முதல் 11 எம்எல்ஏ.க்கள பாஜகவில் இணைவார்கள் என்றும் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்த ஊகங்கள் ஒருபுறம் இருக்க ம.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, கமல்நாத் மற்றும் நகுல்நாத் படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து “ஜெய் ஸ்ரீ ராம்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், நேற்று மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் விடி சர்மா, “காங்கிரஸ் கட்சி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை புறக்கணித்ததால் அக்கட்சியின் பல்வேறு தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று கமல்நாத், நகுல்நாத் செய்தி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கமல்நாத் பாஜகவில் இணைவாரா என விடி சர்மாவிடம் கேள்வி எழுப்பியபோது, “இன்று காங்கிரஸில் நிலவும் சூழலைத்தான் நான் எடுத்துரைத்தேன். எங்கள் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். காங்கிரஸ் ராமரைப் புறக்கணிக்கிறது. ஆனால் இந்தியர்கள் அனைவரின் மனங்களிலும் ராமர் இருக்கிறார். நீங்கள் இப்போது சில பிரமுகர்கள் பெயர்களை என்னிடம் குறிப்பிட்டீர்கள். ஒருவேளை அவர்களுக்கு ராமர் புறக்கணிப்பால் மனதில் வலி இருந்தால் அவர்களை பாஜகவுக்கு வரவேற்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

திக்விஜய் சிங் கருத்து: மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இந்த சலசலப்புகளை மறுத்துள்ளார். கமல்நாத்துடன் நான் நேற்றிரவு பேசினேன். அவர் சிந்த்வாராவில்தான் இருக்கிறார். அவர் நேரு - காந்தி குடும்பத்துடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். அப்படிப்பட்டவர் சோனியா காந்தி, இந்திரா காந்தி குடும்பத்தை விட்டுப் பிரிவார் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x