Published : 16 Feb 2024 05:31 AM
Last Updated : 16 Feb 2024 05:31 AM

கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் விவசாயிகள் இன்று பாரத் பந்த்

டெல்லி நோக்கி டிராக்டரில் பேரணி செல்வதற்காக, பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் நேற்று குவிந்திருந்த விவசாயிகள்.

புதுடெல்லி: விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று பாரத் பந்த்தில் பங்கேற்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட பல விவசாயிகள் சங்கங்களும், மத்திய தொழிற் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்திரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கங்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

டிராக்டர் மற்றும் டிராலிகளில் 6 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களுடன் இவர்கள் புறப்பட்டனர். இவர்களை டெல்லி நகருக்குள் நுழைய விடாமல் தடுக்க ஹரியாணா எல்லையில் பாதுகாப்பு படையினர் தடுப்புகள் மற்றும் முள் வேலிகளை அமைத்தனர்.

இதனால் பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் ஒன்று திரண்டனர். ட்ரோன்மூலம் கண்ணீர் புகை குண்டுகளைவீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைக்க ஹரியாணா போலீஸார் முயன்றனர். ஆனால் பலன் இல்லை. போலீஸாரின் இந்த செயலுக்கு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

பஞ்சாப்பில் விவசாயிகள் கூடியிருக்கும் பாட்டியாலா, சங்ருர், ஃபதேகர் சாகிப் மாவட்டங்களின் பல பகுதிகளில் இணை சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஹரியாணாவின் அம்பாலா, குருஷேத்ரா, கைத்தல், ஜிந்த, ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா மாவட்டங்களில் ஏற்கனவே செல்போன் இணைய சேவைகளை மாநில அரசு நிறுத்தியுள்ளது.

3-ம் கட்டபேச்சுவார்த்தை: விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8 மற்றும் 12-ம் தேதிகளில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், மத்தியஅமைச்சர்கள் அடங்கிய குழுவினரும் நேற்று மாலை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் சார்பில் வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா, வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தீர்வு எட்டப்படவில்லை. இந்த சூழலில் போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் ஹரியாணா போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளைவீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பஞ்சாபில் நேற்று மதியம் 12 மணி முதல் 4 மணி வரை பாரதி கிசான் யூனியன், பிகேயு தகுண்டா சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல் டோல் கேட்களில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்று பாரத் பந்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் இன்று நடைபெறும் பாரத் பந்த்தில் பங்கேற்க வேண்டும் என சம்யுக்தா கிசான் மோர்சாஉட்பட பல விவசாயிகள் சங்கங்கள்மற்றும் மத்திய தொழிற் சங்கங்கள்அழைப்பு விடுத்துள்ளன. இதில்அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள னர். இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து, வேளாண் நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்திரவாத திட்ட பணிகள் இன்று பாதிக்கப்படலாம், தனியார் அலுவலகங்கள், கடைகள், ஊரக தொழில் சாலைகள், சேவைநிறுவனங்கள் ஆகியவை இன்று மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசியப் சேவைகளில் பாதிப்பு இருக்காது.

30,000 கண்ணீர் புகை குண்டுகள்: போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீஸாரிடம் ஏற்கனவே அதிகளவிலான கண்ணீர் புகை குண்டுகள் இருப்பில் உள்ளன. இந்நிலையில் மத்தியப் பிரதேசம் குவாலியரில் உள்ள எல்லை பாதுகாப்பு படைப் பிரிவிடம் இருந்து மேலும் 30,000 கண்ணீர் புகை குண்டுகளை வாங்க டெல்லி போலீஸார் வாங்க உள்ளனர்.

மாணவர்களுக்கு அறிவுறுத்தல்: விவசாயிகள் போராட்டத்தால் தேசிய தலைநகர் மண்டலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x