Published : 14 Feb 2024 08:02 PM
Last Updated : 14 Feb 2024 08:02 PM

கண்ணீர் புகை குண்டு ட்ரோன்களுக்கு ‘பதிலடி’யாக பட்டம் பறக்கவிட்ட பஞ்சாப் விவசாயிகள்!

புதுடெல்லி: விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி இரண்டாவது நாளை எட்டி உள்ள நிலையில், போராட்டக் களம் புதன்கிழமை விவசாயிகளின் நூதன யுக்தி ஒன்றுக்குச் சாட்சியானது. அரசு தங்களுக்கு எதிராக ஏவி விடும் கண்ணீர் புகை குண்டுகளை சுமந்து வரும் ட்ரோன்களுக்கு பதிலடியாக பட்டங்களைப் பறக்க விட்டு விவசாயிகள் செயலிழக்கச் செய்தனர்.

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குவது, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி போவதில் பஞ்சாப் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதற்காக நேற்று டெல்லி நோக்கி பேரணி தொடங்கினர். அவர்களின் பேரணியை பஞ்சாப் - ஹரியாணா எல்லையின் ஹரியாணா போலீஸார் தடுத்தனர். இதற்காக சிமென்ட் தடுப்புகள், முள் வேலிகள், அமைத்து, போலீஸார், துணை ராணுவத்தினரை நிலை நிறுத்தியிருந்தனர்.

தங்களின் கொள்கையில் உறுதியாக இருந்த விவசாயிகள் தடைகளை மீறி முன்னேற முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீச்சி அடித்தும், தடியடியும் நடத்தினர். இதனால் அங்குள்ள ஆம்லாவின் ஷம்பு பகுதியில் பதற்றம் நிலவியது. நேற்று இரவு இடைநிறுத்தம் செய்யப்பட்ட போராட்டம் இன்று காலையில் மீண்டும் தொடங்கியது. விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் இருக்க ஹரியாணா போலீஸார் மீண்டும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கூட்டத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீச போலீஸார் ட்ரோன்களை பயன்படுத்தினர்.

இந்த நிலையில், தங்கள் மீது அரசு ஏவி விடும் ட்ரோன்களை எதிர்கொள்ள விவசாயிகள் ஒரு நூதன யுக்தியைக் கையாண்டனர். ட்ரோன்களுக்கு எதிராக பட்டங்களை பறக்க விட்டு அவற்றை செயலிழக்கச் செய்தனர். ட்ரோன்களின் காத்தாடிகளில், பட்டங்களின் மாஞ்சா நூலைச் சிக்க வைத்து அவற்றை செயலிழக்கச் செய்வதுதான் இந்த புத்திசாலித்தனான நடவடிக்கைகளின் செயல் திட்டம்.

இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமாறு விவசாயிகள் நடந்து கொள்ளக் கூடாது. விவசாய சங்கங்களுடன் நேர்மறையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்களின் முயற்சிகள் தொடரும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், தற்போது பேசப்பட்டு வரும் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இன்றைய இரண்டாவது நாளில் ஷம்பு எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர், "விவசாயிகளின் போராட்டம், அரசியல் சாராமல், அமைதியான முறையில் நடந்து வரும் நிலையில், அரசு அவர்களை இழிவுபடுத்துகிறது. முதன்முறையாக விவசாயிகளுக்கு எதிராக துணை ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவே விரும்புகிறோம். நாங்கள் அரசாங்கத்துடன் மோத விரும்பவில்லை. நாங்கள் நேற்றும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம். இன்றும் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

தங்கள் முயற்சியில் மனம் தளராத இளம் விவசாயிகள் டிராக்டரின் உதவியுடன் தடைகளை உடைக்க முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் பாட்டில் ஈர உடைகள், கண்ணீர் புகை குண்டின் தாக்கத்தை குறைக்கும் உபகரணங்களுடன் களத்தில் நின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x